
ஓணம் பண்டிகையைக் கொண்டாட, ஆஸ்திரேலியா சென்ற நடிகை நவ்யா நாயர், தனது கைப்பையில் ஒரு முழம் மல்லிகைப் பூ எடுத்துச் சென்றதற்காக ஆஸ்திரேலியாவில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
விக்டோரியாவில் உள்ள மலையாள அமைப்பினர் நடத்திய ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்க கேரளத்திலிருந்து நடிகை நவ்யா நாயர் சென்றிருக்கிறார். அவர் மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும், அவரது கைப்பையில் இருந்த ஒரு முழம் மல்லிகைப் பூவுக்காக, அவருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரணம், ஆஸ்திரேலியாவில் பல்வேறு பொருள்களை விமானப் பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக மல்லிகைப் பூ உள்ளது.
தனது தந்தை ஒரு முழம் மல்லிகைப் பூ வாங்கி வந்து அதனை இரண்டாகத் துண்டித்து ஒன்றை தலையில் வைத்துக் கொள்ளவும், மற்றொன்றை பையில் வைத்துக் கொள்ளவும் கொடுத்தார். நானும் அதனை எனது கைப்பையில் வைத்துக் கொண்டேன் என்கிறார் நவ்யா நாயர்.
சட்டத்துக்கு எதிராக நான் செய்தது தவறுதான். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். எப்போதும் அறியாமையை மன்னிக்க முடியாது. 15 செ.மீ. நீளமுள்ள மல்லிகை சரத்தைக் கொண்டு வந்துவிட்டேன். வேண்டுமென்றே செய்யவில்லை. அதற்காக விமான நிலைய அதிகாரிகள் அபராதம் விதித்துவிட்டனர். 28 நாள்களுக்குள் செலுத்துமாறு கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது, ஓணம் கொண்டாட ஆஸ்திரேலியா செல்வது குறித்து புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். கேரள பாரம்பரிய புடவையில் தலையில் மல்லிகைப் பூ அலங்காரத்துடன் அவர் புகைப்படங்களை பதிவிட்டிருந்த நிலையில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இது மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவுக்குள் வெளிநாடு செடிகள், பூக்கள், விதைகள், பழங்கள், காய்கறிகள், மண், விலங்குகளுக்கான பொருள்கள் என எதையும் கொண்டு வரக்கூடாது. இவை தங்கள் நாட்டு வேளாண்மையை பாதிக்கலாம் என்பதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.