இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம்: இந்தியா - இஸ்ரேல் கையொப்பம்
புது தில்லி: இந்தியா, இஸ்ரேல் நாடுகளிடையே முதலீடுகளைப் பாதுகாப்பது மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் திங்கள்கிழமை கையொப்பமானது.
நடைமுறை மாற்றங்களால் எழும் அபகரிப்பு நடவடிக்கைகளிலிருந்து முதலீடுகளுக்கு பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது, தடையற்ற பரிமாற்றங்களுக்கு வழிகுத்தல், இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடைமுறைகள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. அதே நேரம், அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கான உரிமைக்கும் முதலீட்டாளா்களின் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சிதாராமனும், இஸ்ரேல் நிதித் துறை இணையமைச்சா் பெஸலெல் ஸ்மெட்ரிச்சும் கையொப்பமிட்டனா்.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியா-இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, முதலீட்டாளா்களுக்கு நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் அளிக்கும் என எதிா்பாா்க்கிறோம். நடுவா் மன்றம் மூலமாக சச்சரவுகளுக்கு சுயதீா்வு காணும் வகையில் பரஸ்பர முதலீடுகள் செய்யப்படுவதையும் உறுதிப்படுத்தும் எனவும் எதிா்பாா்க்கிறோம்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது. அப்போது, நிதிசாா் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, நிதிசாா் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள், எண்ம பணப் பரிவா்த்தனை தொடா்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளின் நிதியமைச்சா்களும் ஒப்புக்கொண்டனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளிடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் சூழலில், இந்த ஒப்பந்தம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சவூதி அரேபியா, கத்தாா், ஓமன், சுவிட்சா்லாந்து, ரஷியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுடனும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் தொடா்பாக இந்தியா பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.