
கல்விக் கொள்கை, வழிபாட்டுத் தலங்கள் குறித்து ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள லால் சாகர் நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் கூட்டம் செப்டம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரை நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட 32 அமைப்புகளைச் சேர்ந்த 320 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அலோக் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த மூன்று நாள்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து அகில பாரத பிரசார் பிரமுக் அமைப்பின் தலைவர் சுனில் அம்பேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:
”இந்த மூன்று நாள்கள் கூட்டத்தில் கல்வித் துறை சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் உள்ள அனுபவங்களை நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியில் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில், கல்வியில் இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கு நேர்மறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆங்கில மொழிக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, ஆனால் கல்வி மற்றும் நிர்வாகத்தில் இந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கல்வியை தேசியமயமாக்கும் வகையில் பாடப்புத்தகங்கள் எழுதுதல் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதிகரித்து வரும் மதமாற்றங்கள் மற்றும் பஞ்சாப் இளைஞர்கள் இடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. சேவா பாரதி மற்றும் வித்யார்த்தி பரிஷத் அமைப்புகள் நடத்தும் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பிரச்சாரங்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டன. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல், மேற்கு வங்க மக்களின் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. மணிப்பூரில் சமீபத்தில் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டன.
பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்களின் வன்முறைகள் குறைந்துள்ளது, ஆனால், மக்களவை தவறுதலாக வழிநடத்தும் முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன. விடுதிகள் மற்றும் பழங்குடி உரிமைகள் தொடர்பாக வனவாசி கல்யாண் ஆசிரமத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவுக்கான திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிமக்களின் கடமைகள் போன்ற தலைப்புகளின் கீழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. அக்டோபர் 2 ஆம் தேதி நாக்பூரில் நூற்றாண்டு விழாவுக்கான தொடக்கவிழா நடைபெறவுள்ளது.
காசி - மதுரா போன்ற வழிபாட்டுத் தலப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் இந்தப் பிரச்னைகளுக்கான தீர்வு மோதல் அல்லது கிளர்ச்சி மூலம் அல்ல, மாறாக சட்டம் மற்றும் பரஸ்பர உரையாடல் மூலம் தேடப்படும் என்று தெளிவாகக் எடுத்துரைக்கப்பட்டது.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.