
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்குப் படைக்கப்பட்ட லட்டுவை ரூ.1.88 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளார் தெலங்கானாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர்.
ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் கிலோ கணக்கில் மெகா லட்டு தயாரித்து, விநாயகருக்குப் படைக்கப்படுவதும், சதுர்த்தி விழா நிறைவடைந்ததும் அந்த லட்டுவை ஏலம் விடுவதும் வழக்கம். விநாயகருக்குப் படைத்த லட்டுவை ஏலம் எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்தவகையில், இந்தாண்டு தெலங்கானாவின் நிர்மல் நகரில் நடைபெற்ற விநாயகர் லட்டு ஏலத்தில் அம்ரீன் என்ற முஸ்லிம் பெண் ரூ.1,88,888 தொகைக்கு லட்டு ஏலம் எடுத்துள்ளார். அவரது பங்கேற்பும், வெற்றியும் மக்களிடையே ஆர்வத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
ஏலத்துக்குப் பின் பேசிய அம்ரீன், ஏலத்தில் பங்கேற்பது சக மக்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு வழியாகும். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார். இந்த லட்டுவை வெல்வதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் ஏலம் மட்டுமல்ல ஒற்றுமையைக் கொண்டாடுவதற்கு சிறந்த வழி என்று அவர் கூறினார். அவரது இந்தச் செயலை இந்து சமூக மக்கள் அன்புடன் வரவேற்றனர். விநாயகர் சதுர்த்தி லட்டு ஏலத்தில் முஸ்லிம் பெண் வென்றது சமூக ஒற்றுமைக்கு உதாரணமாக அமைந்துள்ளது.
இந்த நிகழ்வு முதல் முறையல்ல, கடந்தாண்டு கோமரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள பட்பள்ளியில், அஃப்சல் முஸ்கான் என்ற முஸ்லிம் தம்பதியினர் ரூ.13,126-க்கு விநாயகர் லட்டுவை வென்றனர்.
மாநிலத்தின் பிற இடங்களிலும் விநாயகர் லட்டு ஏலத்தில் சாதனை படைத்துள்ளது. பந்தலகுண்டாவின் ஜாகீரில் உள்ள கீர்த்தி ரிச்மண்ட் வில்லாஸ் ஏற்பாடு செய்த விநாயகர் லட்டு ஏலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக இந்த லட்டு ஏலம் ரூ.2.32 கோடிக்கு விற்கப்பட்டது. இது கடந்தாண்டு ரூ.1.87 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. ஐதராபாத்தின் பிரபல பாலாபூர் கணேஷ் லட்டு இந்தாண்டு 35 லட்சத்திற்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.