
ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மேராஜ் மலிக்(37) இன்று (செப். 8) பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவலில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரில் டோடா மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எம்எல்ஏ மேராஜ் மலிக்.
பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், பதவியிலிருக்கும் ஒரு எம்எல்ஏ போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவது இதுவே முதல்முறையாகும். இச்சட்டத்தின்கீழ், எவ்வித புகாரும் இல்லாமல் ஒருவர் மீது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதி தடுப்புக்காவலில் இருக்கச் செய்யலாம்.
கடந்தாண்டு அக்டோபரில் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் டோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மேராஜ் மலிக் தனக்கெதிராகப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட சுமார் 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் எம்எல்ஏவானார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் துணை ஆணையருக்கு எதிராக மேராஜ் மலிக் சமூக ஊடகத்தில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, மலிக்குக்கு எதிராக அரசு ஊழியர்கள் ஜம்மு காஷ்மீரில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூத்த அதிகாரிகளைக் குறிவைத்து அவதூறு பரப்புவதை மலிக் வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதன்மூலம், அரசியல் ஆதாயம் திரட்டிக்கொள்லும் அவர், இளைஞர்களை அரசு நிர்வாகத்துக்கு எதிராக போராட தூண்டுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, தக் மாளிகையிலிருந்து ஜம்மு காஷ்மீரில் வெள்ளம் பாதித்த தமது சட்டப்பேரவைத் பகுதிக்குள்பட்ட இடங்களைப் பார்வையிடச் செல்ல முற்பட்டபோது அவரை போலீஸார் தடுப்புக்காவலில் வைத்தனர். அதன்பின், அவர் பாதெர்வா சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், இந்தக் கைது நடவடிக்கையனது மோடி - அமித் ஷா அரசின் வெளிப்படையான சர்வாதிகாரப் போக்கு என்று ஆம் ஆத்மி கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பும் மக்களை அச்சுறுத்தலாக நினைக்கிறார்கள். சர்வாதிகாரம் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ அப்போது புரட்சி வெடிக்கும் என்றும் ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
போலீஸின் இந்த நடவtஇக்கைக்கு ஜம்மு காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சிகளான பிடிபி மற்றும் மக்கள் மாநாட்டுக் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.