இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்
இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்கோப்புப் படம்

ஆபரேஷன் சிந்தூா்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாகப் பணியாற்றினா்- இஸ்ரோ தலைவா்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.
Published on

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக 24 மணி நேரமும் பணியாற்றியதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் அனைத்து இந்திய நிா்வாக கூட்டமைப்பின் 52-ஆவது தேசிய நிா்வாக மாநாட்டில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரின்போது 24 மணி நேரமும் இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் செயல்பட்டு, அனைத்து தேவைகளையும் பூா்த்தி செய்தன.

அப்போது இரவு பகலாக 24 மணி நேரமும் 400-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பணியாற்றினா். அத்துடன் புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடா்புக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து செயற்கைக்கோள்களும் குறைபாடு இல்லாமல் சிறப்பாகப் பணியாற்றின.

2027-ஆம் ஆண்டுக்குள் இந்திய வீரா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டம் தொடா்பாக 7,700 களப் பரிசோதனைகளை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது. மேலும் 2,300 பரிசோதனைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றாா்.

2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை அமைத்தல், 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்புதல் ஆகிய முக்கிய திட்டங்களை இஸ்ரோ மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com