
கேரளத்தில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குணமடைந்து வீடு திரும்பினர்.
அம்மாநிலத்தில் மாசடைந்த நீரில் நீந்துவது அல்லது குளிப்பது மூலமாக அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று ஏற்படுவது திடீரென அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 42 பேருக்கு இந்த நோய்த்தொற்று அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 பேர் இந்நோய்த் தொற்றால் உயிரிழந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் மூளையை பாதிக்கும் அமீபா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்க, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளைத் தூய்மையாகப் பராமரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாமரசேரி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி அனாயா, இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆக. 14-இல் உயிரிழந்தார். இந்த நிலையில், உயிரிழந்த அச்சிறுமியின் உடன்பிறந்த 12 மற்றும் 7 வயதான சகோதரிகள் இருவருக்கும் அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(செப். 8) மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
தாமரசேரி பகுதியைச் சேர்ந்த மேற்கண்ட 3 குழந்தைகளும் தங்கள் வீட்டின் அருகேயுள்ளதொரு குளத்தில் குளித்ததால் அவர்களுக்கு அமீபா தொர்ற்று பரவியுள்ளது.
இதையடுத்து, கோழிக்கோட்டு அரசு மருத்துவமனையில் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. அதில், 10 வயது சிறுவன், 11 வயது சிறுமியொருவரும் அடங்குவர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.