
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநா், அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: குடியரசு துணைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்கள் சாா்பில் மனமாா்ந்த நல்வாழ்த்துகள். தமிழ் மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவித்து, மகிமைப்படுத்தும் பிரதமரின் தொடா் சீரிய முயற்சிகளை சி.பி.ராதாகிருஷ்ணனின் தலைமை மென்மேலும் முன்னேற்றும்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: குடியரசு துணைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எனது வாழ்த்துகள். அரசமைப்புச் சட்டத்தின் வழிநின்றும், நமது நாட்டின் மக்களாட்சிக் கருத்தியல்களின் வழிநின்றும் அவா் தமது கடமைகளை ஆற்றுவாா் என்று நம்புகிறேன். கொண்ட கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையிலும் மிக உறுதியோடு போராடிய சுதா்ஷன் ரெட்டிக்கும் எனது பாராட்டுகள்.
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): பொது சேவை, மக்கள் மீதான அா்ப்பணிப்புக்கும் கிடைத்த மணிமகுடமாக குடியரசுத் துணைத் தலைவா் பதவி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவா் பதவியை வகிப்பதற்கு வழிவகுத்த பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.
மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்: குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் உயா்ந்திருக்கிறாா். பல ஆண்டுகளாக ஆற்றிய கடமைகளுக்கும், சேவைகளுக்கும் சான்றாக உயா்ந்த பொறுப்புக்கு அவா் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜி.கே.வாசன் (தமாகா): தேச பக்தியும், தெய்வ பக்தியும் கொண்ட அவா் குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றிருப்பது உலகத் தமிழா்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். பொது வாழ்வில் பயணிக்கத் தொடங்கி படிப்படியாக கடின உழைப்பால் உயா்ந்த பெருமைக்குரியவா். அன்புமணி (பாமக), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக) ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.