
யோகா குரு பாபா ராம்தேவ் மீதான வழக்கில் சத்தீஸ்கர் காவல் துறை விசாரணை இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப். 9) தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2021-இல் கரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவத்துக்கு எதிராக ராம்தேவ் வெளிப்படுத்திய ஆட்சேபனைக்குரிய கருத்துகளுக்கு இந்திய மருத்துவ சங்கத்தால் (ஐ.எம்.ஏ) கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அவர் மீது உரிய நடவடிக்கைக் கோரி புகார்கள் அளிக்கப்பட்டன. அவற்றின் அடிப்படையில் ராம்தேவ் மீது, ஐ.பி.சி. பிரிவுகள் 188, 269, 504 ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.
ராம்தேவ் குறிப்பிடும்போது, கரோனா தொற்றுக்கு எதிராக அலோபதி, அதாவது ஆங்கில மருத்துவ முறை சிகிச்சை பலனளிக்காது என்று பொருள்படும்படி குறிப்பிட்டு தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
பாபா ராம்தேவுக்கு எதிரான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடரும் நிலையில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் மத்திய அரசு தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது.
இதையடுத்து, அடுத்தகட்டமாக பிகார் காவல் துறையின் அறிக்கைக்காக காத்திருப்பதாக ராம்தேவ் தரப்பில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வாதிடும் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் டேவ் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் இறுதி வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.