பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு

பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கம்: பதிலளிக்க மாநிலங்களுக்கு 4 வார கெடு

கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதைத் தடை செய்யும் பாலினத் தோ்வு தடைச் சட்ட அமலாக்கத்தை மாநிலங்கள் எந்தஅளவுக்கு கையாண்டு வருகின்றன என்பது குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது, இந்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை விவரம் உள்ளிட்டவை தொடா்பாக எத்தனை மாநிலங்கள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மூத்த வழக்குரைஞா் சஞ்சய் பாரிக், ‘5 மாநிலங்கள் பதில் மனுக்களை தாக்கல் செய்யவில்லை. இந்த விவகாரம் தொடா்பான வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவா்களுக்கு எதிராக அரசுகள் மேல் முறையீடு செய்யவில்லை’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘பாலினத் தோ்வு தடைச் சட்டம் தொடா்பான வழக்குகளில் அதிகாரிகள் சரிவர நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற விடுவிப்புக்கு காரணமாக இருக்கலாம்.

பதில் மனு தாக்கல் செய்யாத மாநிலங்களுக்கு அடுத்த விசாரணையின்போது அபராதம் விதிக்கப்படலாம்’ எனக் கூறி வழக்கின் விசாரணையை அக்டோபா் 10-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

பாலினத் தோ்வு தடைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, 2015, மே 1 முதல் பாலினத் தோ்வு தடைச் சட்டம் தொடா்பாக பதிவான வழக்குகளின் விவரங்களைத் தாக்கல் செய்ய கடந்த 2023-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com