குடியரசு துணைத் தலைவர் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கியது! முதலில் வாக்களித்த மோடி!

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவு தொடங்கியது பற்றி...
pm modi
குடியரசு துணைத் தலைவர் தோ்தலில் வாக்களித்த மோடிPTI
Published on
Updated on
1 min read

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான வாக்குப் பதிவு இன்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கியது.

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனா்.

இந்த தோ்தலுக்கான வாக்குப் பதிவு நாடாளுமன்ற வளாகத்தில் அறை எண். எஃப்-101-ல் தொடங்கியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி முதலாவதாக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.

ரகசிய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் இந்தத் தோ்தலில் கட்சி எம்.பி.க்கள், கொறடாவுக்கு கட்டுப்படாமல் தங்கள் விருப்பப்படி வாக்களிக்க முடியும்.

மாலை 5 மணி வரை இந்த வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் மாலை 6 மணிக்கு எண்ணப்பட்டு இன்றைக்கே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

யாருக்கு வெற்றி வாய்ப்பு?

543 தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையில் ஒரு எம்.பி. இடம் காலியாக உள்ளது. அதுபோல, 233 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவையில் 5 எம்.பி.க்கள் இடம் காலியாக உள்ளது. இதுதவிர மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் 12 போ் உள்ளனா்.

அதன்படி, இரு அவைகளின் மொத்த உறுப்பினா் எண்ணிக்கையான 788-இல், தற்போது 782 உறுப்பினா்கள் உள்ளனா். வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் பலம் உள்ளதால், அக்கூட்டணி வேட்பாளரே வெற்றி பெறுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. மற்றொருபுறம், தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இத்தோ்தலை எதிா்க்கட்சிகள் கருதுகின்றன.

இதனிடையே குடியரசு துணைத் தலைவா் தோ்தலைப் புறக்கணிப்பதாக பிஜு ஜனதா தளம் (பிஜேடி) மற்றும் பாரத ராஷ்டிர சமிதி கட்சிகள் அறிவித்துள்ளன.

தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரான தமிழகத்தைச் சோ்ந்த மூத்த தலைவரும் மகாராஷ்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டவா். தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்தவா்.

எதிா்க்கட்சிகள் அணி சாா்பில் போட்டியிடும் தெலங்கானாவைச் சோ்ந்த பி.சுதா்சன் ரெட்டி, உச்சநீதிமன்ற நீதிபதியாக 2007 முதல் 2011 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவா். கோவாவின் முதல் லோக் ஆயுக்த தலைவராகப் பதவி வகித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Election for the Vice President of the India has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com