
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்கவுள்ளார். இவர் 452 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.
குடியரசு துணைத் தலைவருக்கான வாக்குப்பதிவு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 767 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
781 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 13 பேர் வாக்களிக்கவில்லை எனத் தெரிகிறது. இதன்மூலம் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 98.2% வாக்குகள் பதிவாகின.
452 வாக்குகளுடன் வெற்றி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிந்த நிலையில், 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், சி.பி. ராதாகிருஷ்ணன் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களுடன் பேசிய மாநிலங்களவை பொதுச்செயலாளர் பிரமோத் சந்திர மோடி,
''தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்றார். அவர் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி வேட்பாளர் பி. சுதர்ஷன் ரெட்டி 300 முதல் வாக்குகளைப் பெற்றுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.
புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்ந்தெடுக்கப்படுள்ளதால், அவா் இந்தப் பதவியை வகிக்கும் மூன்றாவது தமிழர் என்ற பெருமைக்குரியவராகிறார்.
இதற்கு முன்பு நாட்டின் முதல் குடியரசு துணைத் தலைவராக (1952-1962) சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணனும், 7-ஆவது குடியரசு துணைத் தலைவராக ஆா்.வெங்கட்ராமனும் (1984-1987) இருந்தனர். (பின்னா் இவா்கள் இருவரும் குடியரசுத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.)
செப். 12-ல் பதவியேற்பு?
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக. 10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நலத்தைக் காரணம் காட்டி தனது பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில், சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதால், நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக அவர் பொறுப்பேற்கவுள்ளார். செப். 12ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
சி.பி. ராதாகிருஷ்ணன் யார்?
1957-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் தேதி திருப்பூரில் பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன், வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 1974 ஆம் ஆண்டு பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜன சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராக இருந்தவர். இதற்கு முன்பு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்திலும் (ஆர்எஸ்எஸ்) இருந்தவர்.
1996 ஆம் ஆண்டு தமிழக பாஜக மாநில செயலாளராக நியமிக்கப்பட்டவர். 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனவர்.
பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகப் பணியாற்றியவர். மார்ச் மற்றும் ஜூலை 2024 க்கு இடையில் தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்தவர்.
இதையும் படிக்க | சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.