குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை....
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!
IANS
Published on
Updated on
2 min read

நமது சிறப்பு நிருபர்

நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தேர்தலில் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் பெற்று இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் பதவிக்குத் தேர்வாகியுள்ளார்.

இதையொட்டி, செவ்வாய்க்கிழமை நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் பதிவான 767 வாக்குகளில் 300 "முதல் விருப்ப வாக்குகள்' எதிர்க்கட்சி வேட்பாளரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டிக்கு கிடைத்தது. சி.பி. ராதாகிருஷ்ணன் 452 "முதல் விருப்ப வாக்குகளை' பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரான மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் பி.சி. மோடி அறிவித்தார். இந்த தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற தேவையான இடங்கள் 377. அந்த வகையில் பெரும்பான்மைக்கும் கூடுதலாகவே சி.பி. ராதாகிருஷ்ணன் வாக்குகளைப் பெற்றார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டின் தற்போதைய பலத்தின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் மூலம் பதிவாகும் வாக்குகள் அடிப்படையில் சி.பி. ராதாகிருஷ்ணன் குறைந்தபட்சம் 427 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (11 எம்.பி.க்கள்) ஆதரவுடன், அவருக்கு 438 வாக்குகள் கிடைத்திருக்கும். இது தவிர சுயேச்சைகள் மற்றும் பிற நடுநிலை எம்.பி.க்களின் வாக்குகளைக் கணக்கிட்டால் அவருக்கு 449 வாக்குகள் கிடைத்திருக்க வேண்டும்.

எதிரணியில் இண்டி கூட்டணி உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் சுதர்சன ரெட்டி 315 வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிவில் சி.பி. ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகளைப் பெற்றார். சுதர்சன் ரெட்டி எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

செல்லாத 15 வாக்குகள், எதிர்க்கட்சிகளில் இருந்து பதிவாகியிருந்தாலும் கூட, சி.பி. ராதாகிருஷ்ணன் எதிர்பார்த்ததை விட சில வாக்குகளை கூடுதலாகப் பெற்றார். அப்படியென்றால் இது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்துள்ளதையே தெளிவுபடுத்துகிறது.

அந்த வகையில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவராக வேண்டும் என்ற எண்ணத்தில் அவருக்கு சார்பான நிலையை எடுத்துள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள்தான் கட்சி மாறி வாக்களித்திருக்க வேண்டும்.

அவர்கள் தமிழகத்தில் உள்ள கட்சியில் இருந்தோ அல்லது மகாராஷ்டிரத்தின் உத்தவ் தாக்கரே சிவசேனை அல்லது வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே சிவசேனைக்கு மக்களவையில் 9 இடங்களும் மாநிலங்களவையில் இரண்டு இடங்களும் உள்ளன. மேற்கு வங்கத்தில் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸýக்கு மாநிலங்களவையில் 13, மக்களவையில் 28 என்ற வகையில் உறுப்பினர்கள் பலம் உள்ளது. இவர்களில் சிலர் சிபிஆருக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக் கூடும்.

மொத்தம் 11 வாக்குகளைக் கொண்ட பிஜூ ஜனதா தளம், மாநிலங்களவையில் நான்கு இடங்களைக் கொண்டுள்ள பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), ஒரு இடத்தைக் கொண்டுள்ள சிரோமணி அகாலி தளம் கட்சி ஆகியவை தேர்தலைப் புறக்கணிப்பதாக ஏற்கெனவே அறிவித்தன.

புதிதல்ல... குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் கட்சி மாறி உறுப்பினர்கள் வாக்களிப்பது புதியது கிடையாது. 2022-ஆம் ஆண்டில் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் குறிப்பாக எதிர்க்கட்சி ஒருங்கிணைந்த அணிக்குள் இருந்தவர்கள் கட்சி மாறி வாக்களித்தனர். அத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான ஜகதீப் தன்கர் 528 வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில் நடந்த குடியரசுத்துணைத்தலைவர் தேர்தலில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வா களமிறக்கப்பட்டு தோல்வியைத் தழுவினார்.

குடியரசு துணைத்தலைவர் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுவதால், எம்.பி.க்கள் கட்சியின் கொறடாக்களுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. இது, கட்சி மாறி வாக்களிப்பதற்கு சாதகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com