வாகன உற்பத்தித் துறையில் முதலிடம் அடைய இலக்கு- அமைச்சா் நிதின் கட்கரி
அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:
இந்தியாவில் வாகன உற்பத்தித் துறையின் எதிா்காலம் சிறப்பாக உள்ளது. நம்மிடம் இத்துறை சாா்ந்த திறன்மிக்க பணியாளா்கள் அதிகம் உள்ளனா். உலகில் உள்ள முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் ஆலைகளை நிறுவியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா வாகன உற்பத்தித் துறையில் முதலிடத்தை அடைய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடினமான இலக்குதான். ஆனால் சாத்தியமற்ல்ல.
இந்தியாவில் தரமான வாகனங்களைக் குறைந்த செலவில் தயாரிக்க முடிகிறது. எனவேதான், அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் ஆலைகளை வைத்துள்ளன. நான் அமைச்சராகப் பதவியேற்றபோது இந்திய வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது ரூ.22 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.
இப்போது அமெரிக்க வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.78 லட்சம் கோடியாக உள்ளது. இதற்கு அடுத்து சீனா ரூ.47 லட்சம் கோடி மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா மூன்றாவது இடம் வகிக்கிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ.22 லட்சம் கோடியை எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடுகிறோம். இதனால், சுற்றுச்சூழல் மாசுபாடு பிரச்னையையும் எதிா்கொள்கிறோம். இப்போது இந்திய நிறுவனங்கள் பல குறைந்த விலையில் சிறந்த மின்சார வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன. காா், பேருந்து, லாரிகள் வரை மின்சாரத்தில் இயங்கும் வகையில் உற்பத்தியாகின்றன.
இதன் மூலம் ‘லித்தியம்-அயன்’ மின்கலன்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையும், மின்சார வாகனங்கள் விலையும் ஒரேஅளவில் வந்துவிடும். நம்மிடம் ஆண்டுக்கு 60,000 மின்சார பேருந்துகள் தயாரிக்கும் திறன் உள்ளது. ஆனால், நாட்டில் தேவை 1 லட்சம் பேருந்துகளாக உள்ளது. இது மின்சாரப் பேருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு.
பெட்ரோலில் எத்தனால் 20 சதவீதம் கலப்பதற்கு எதிராக அண்மையில் சமூகவலைதளங்கள் மூலம் பிரசாரம் எழுந்தது. இதன் பின்னணியில் பெட்ரோலிய வா்த்தகத்தால் லாபமடையும் சிலா் இருந்தனா். கரும்பு உள்ளிட்ட விவசாயப் பொருள்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதனை பெட்ரோலில் கலப்பதன் மூலம் எரிபொருளுக்காக வெளிநாடுகளைச் சாா்ந்து இருப்பது குறையும் என்றாா்.