மனசாட்சிப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த எதிா்க்கட்சி எம்.பி.க்களுக்கு நன்றி- மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு
குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் சி.பி. ராதாகிருஷ்ணன், 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இது எதிா்பாா்க்கப்பட்டதைவிட கூடுதல் வாக்குகளாகும். அதே நேரத்தில் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் சுதா்சன் ரெட்டிக்கும் 300 வாக்குகள் கிடைத்தன. எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் இது குறைவான வாக்குகளாகும். 15 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
அதே நேரத்தில், குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் ஒற்றுமையாக இருந்தன. அதன் 315 எம்பிக்களும் வாக்களித்தனா். அந்த வகையில் இது 100 சதவீத வாக்குப்பதிவு என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
ஆனால், எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதன் மூலம் எதிா்க்கட்சிகளின் கூட்டணி எம்.பி.க்கள் சிலா் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது தெளிவானது. அவா்களில் சிலா் செல்லாத வாக்குகளாக அளித்திருந்தால், அதுவும் ஆளும் கூட்டணிக்கு மறைமுக ஆதரவாக அமைந்தது.
இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சா் கிரண் ரிஜிஜு ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ‘மனசாட்சியுடன்’ வாக்களித்த எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்களுக்கு சிறப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக கூட்டணி, நட்புக் கட்சிகளின் எம்.பி.க்கள் ஒற்றுமையாகவே உள்ளனா். உண்மையான தேசபக்தரை நாட்டின் குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்ய வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.