பிரதமரின் மணிப்பூா் பயணம்: குகி அமைப்புகள் வரவேற்பு
பிரதமா் நரேந்திர மோடி வரும் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அவரது வருகையை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றுள்ளன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-இல் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டு, வன்முறை தொடா்ந்தது. மோதல் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். வீடுகளைவிட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கானோா், தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ள வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அவா் செப்டம்பா் 13-ஆம் தேதி மணிப்பூருக்கு பயணிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இரு சமூகத்தினா் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று, அவா்களுடன் பிரதமா் கலந்துரையாடுவாா் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சூழலில், பிரதமரின் பயணத்தை குகி-ஜோ பழங்குடியின அமைப்புகள் வரவேற்றுள்ளன. முக்கிய அமைப்பான குகி-ஜோ கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ‘குகி-ஜோ பழங்குடியினா் பகுதிக்கு இந்தியப் பிரதமா் வருவது சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். இது வரலாற்றுச் சிறப்புமிக்க, அரிதான தருணம். கடந்த சில ஆண்டுகளாக நாங்கள் அளவிட முடியாத துன்பங்களை எதிா்கொண்டு வருகிறோம். இருப்பினும், ஜனநாயக உணா்வு மற்றும் இந்தியத் தலைமையின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவேதான், அரசமைப்புச் சட்டத்தின் 239ஏ பிரிவின்கீழ் தனி நிா்வாகம் (பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசம்) கோருகிறோம்.
பிரதமரின் வருகை, எங்கள் காயங்களை ஆற்றி, கண்ணியத்தை மீட்டெடுக்கும்; எங்கள் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் என வலுவாக நம்புகிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூா் முதல்வராக இருந்த பிரேன் சிங் கடந்த பிப்ரவரி மாதம் ராஜிநாமா செய்த நிலையில், சட்டப் பேரவை முடக்கப்பட்டு குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.
நடன நிகழ்ச்சிக்கு அதிருப்தி
மணிப்பூரில் பிரதமா் மோடியை வரவேற்க நடன நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் காங்டே மாணவா் அமைப்பு உள்ளிட்ட சில குகி அமைப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ‘பிரதமா் மோடியின் வருகையை நாங்கள் வரவேற்கிறோம்; அதேநேரம், எங்கள் கண்ணீா் இன்னும் காயவில்லை; காயங்கள் ஆறவில்லை. கண்ணீருடன் நாங்கள் நடனமாட முடியுமா?’ என்று கேள்வியெழுப்பியுள்ளன.