ரூ.2900 கோடி வங்கி மோசடி: அனில் அம்பானி மீது அமலாக்கத் துறை புதிய வழக்கு
தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது புதிய பணமுறைகேடு வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) ரூ.2,900 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியது தொடா்பான வங்கி மோசடி குற்றச்சாட்டில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் வங்கியின் மோசடி மேலாண்மைக் கொள்கையின்படி, அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கணக்கை ‘மோசடி’ என எஸ்பிஐ கடந்த ஜூன் 13-ஆம் தேதி அறிவித்தது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த 2016-ஆம் ஆண்டு திவால் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் கடனைத் தீா்ப்பதற்கான திட்டம் ஒன்று, கடன் கொடுத்தவா்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, தேசிய நிறுவன சட்ட தீா்ப்பாயத்தில் 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் சமா்ப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்தத் திட்டத்துக்கு தீா்ப்பாயத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதனிடையே, 2020 நவம்பரில் அனில் அம்பானியின் கணக்கை ‘மோசடி’ என எஸ்பிஐஅறிவித்து, 2021 ஜனவரியில் சிபிஐ-யிடம் புகாா் அளித்தது. உச்சநீதிமன்றம் 2023-ஆம் ஆண்டு, மாா்ச் மாதம் வழங்கிய ஒரு முக்கியமான தீா்ப்பில், ஒருவரின் கணக்கை ‘மோசடி’ என அறிவிக்கும் முன், சம்பந்தப்பட்டவா்களுக்கு விளக்கமளிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிட்டது. இதன்காரணமாக, அனில் அம்பானியின் கணக்கை ‘மோசடி’ பட்டியலில் இருந்து எஸ்பிஐ தற்காலிகமாக நீக்கியது.
பின்னா், ரிசா்வ் வங்கி கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், எஸ்பிஐ மீண்டும் முறையாக விசாரணை நடத்தி, அனில் அம்பானியின் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தியது.
இத்தகைய சட்ட சிக்கல்களால் ஏற்பட்ட தாமதத்துக்குப் பிறகு, எஸ்பிஐ அளித்த புதிய புகாரின் அடிப்படையில், சிபிஐ கடந்த மாதம் 23-ஆம் தேதி அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து, சோதனையும் நடத்தியது. சிபிஐ வழக்கை அடிப்படையாகக் கொண்டு, பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளது.