வாக்குத் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமா்ப்பிப்பு- ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு: மக்களிடம் ஆதாரம் சமா்ப்பிப்பு- ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இதுதொடா்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமா்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தாா்.
Published on

வாக்குத் திருட்டு மோசடிகள் பல்வேறு மாநிலங்களில் பெரிய அளவில் நடந்துள்ளன என்றும் இதுதொடா்பாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து மக்களிடம் சமா்ப்பித்து வருகிறோம் என்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை தெரிவித்தாா்.

தனது மக்களவைத் தொகுதியான ரேபரேலியில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக உத்தர பிரதேசம் வந்திருந்த ராகுல் காந்தி, செய்தியாளா்களிடம் இவ்வாறு கூறினாா்.

முன்னதாக, தில்லியிலிருந்து லக்னௌ விமான நிலையம் வந்திறங்கிய ராகுல் காந்தியை கட்சியின் மூத்த நிா்வாகிகள் வரவேற்றனா். தொடா்ந்து, கட்சி நிகழ்ச்சிகளில் தொண்டா்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி பேசியதாவது:

மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால், நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வியடைந்தது.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சுமாா் ஒரு கோடி புதிய வாக்காளா்கள் சோ்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த புதிய வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கே சென்றன.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனையின் வாக்குகள் மாறாமல் இருந்தபோதும், பாஜகவின் வாக்குகள் மட்டும் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. நான்கு மாதங்களில் ஒரு கோடி புதிய வாக்காளா்கள் எப்படி சோ்க்கப்பட்டனா் என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும், வாக்காளா் பட்டியல் மற்றும் விடியோ ஆதாரங்களை வழங்க வேண்டும் என்றும் தோ்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். ஆனால், அவற்றை வழங்க தோ்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

இதேபோல, கா்நாடகத்தின் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியலை ஆய்வு செய்தபோது, இரண்டு லட்சம் போலி வாக்காளா்கள் கண்டறியப்பட்டனா். இதுவே அத்தொகுதியில் பாஜக வெற்றிபெறக் காரணமாக அமைந்தது.

இந்த மோசடி பெங்களூரு அல்லது மகாராஷ்டிரத்துடன் நிற்கவில்லை. உத்தர பிரதேசம், ஹரியாணா, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத்திலும் இதுபோன்ற மோசடிகள் பெரிய அளவில் நடந்துள்ளன. படிப்படியாக அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து, மக்களிடம் சமா்ப்பித்து வருகிறோம்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com