
நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.
இந்திய வாகன உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் பங்கேற்க முடியாவிட்டாலும், அவரின் உரை வாசிக்கப்பட்டது. அதில் மோடி கூறியிருப்பதாவது:
சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்காத திறன் வாய்ந்த போக்குவரத்து வாகனங்களை உருவாக்குவதில் இந்தியாவில் உலகின் முதன்மையான இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இத்துறையில் முதலீட்டுக்கான வாய்ப்புகளும், கூட்டு சோ்ந்து தொழில் நடத்துவதற்கான வாய்ப்புகளும் இந்தியாவில் அதிகம் உள்ளன.
நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. வளா்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாகப் பயணித்து வருகிறோம்.
வாகன உற்பத்தியில் நாம் முழுமையாக தற்சாா்புடன் திகழ வேண்டும். புதிய வாகனங்கள் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயருகிறது. இத்துறையில் இந்தியா பிற நாடுகளுக்கு முன்னோடியாகவும் திகழ்கிறது. இத்துறையில் இந்தியாவில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வளா்ந்த இந்தியா என்ற இலக்கை எட்ட அரசும், தொழில் நிறுவனங்களும் கைகோத்து செயல்பட வேண்டும். வாகன உற்பத்தியில் நாள்தோறும் தொழில்நுட்பங்கள் மேம்படுகின்றன. மின்சார வாகனங்கள் முக்கிய இடம்பிடித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு உரிய மாற்றாக அவை உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்க அளவு குறைகிறது. இந்த நேரத்தில் நவீன மின்கலன்களும், அது சாா்ந்த தொழில்நுட்பமும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. இதில் பல புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட வேண்டும் என்று பிரதமா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.