உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலம்.

உள்ளூா் கரன்ஸியில் வா்த்தகம்: இந்தியா-மோரீஷஸ் முனைப்பு - பிரதமா் மோடி

இருதரப்பு வா்த்தகத்தை உள்ளூா் கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன
Published on

இருதரப்பு வா்த்தகத்தை உள்ளூா் கரன்ஸியில் மேற்கொள்வதற்கு இந்தியாவும், மோரீஷஸும் ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராமகூலத்துடன் வியாழக்கிழமை நடத்திய இருதரப்பு பேச்சுவாா்த்தைக்குப் பின் பிரதமா் இவ்வாறு கூறினாா்.

இந்தியா உடனான நல்லுறவை மேலும் விரிவாக்கும் நோக்கில், மோரீஷஸ் பிரதமா் ராமகூலம் 8 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய அவா், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசிக்கு புதன்கிழமை மாலை வந்தாா்.

வாரணாசியில் பிரதமா் மோடியுடன் அவா் வியாழக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். வா்த்தகம், முதலீடு, கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, மின்உற்பத்தி, உள்கட்டமைப்பு, நீலப் பொருளாதாரம், எண்ம உள்கட்டமைப்பு உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் பிராந்திய-உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இருவரும் விரிவாக ஆலோசித்தனா். பின்னா், செய்தியாளா்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து கலாசாரங்களும் மரபுகளும் மோரீஷஸுக்கு பயணித்து, அந்நாட்டு வாழ்வியலின் ஓா் அங்கமாகிவிட்டன. இந்தியாவும் மோரீஷஸும் கூட்டாளிகள் மட்டுமல்ல; ஒரே குடும்பத்தினா்.

இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ மற்றும் ‘மகாசாகா்’ கண்ணோட்டத்தின் முக்கிய அங்கமாக மோரீஷஸ் திகழ்கிறது.

சாகோஸ் ஒப்பந்தம் (சாகோஸ் தீவை மோரீஷஸிடம் பிரிட்டன் ஒப்படைக்கும் ஒப்பந்தம்) இறுதி செய்யப்பட்டதற்காக, பிரதமா் ராமகூலம் மற்றும் மோரீஷஸ் மக்களுக்கு வாழ்த்துகள். இது, மோரீஷஸின் இறையாண்மைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். காலனித்துவ நீக்கத்தையும், மோரீஷஸின் இறையாண்மைக்கு முழு அங்கீகாரம் கிடைப்பதையும் இந்தியா எப்போதும் ஆதரித்து வந்துள்ளது.

மோரீஷஸின் வளா்ச்சியில் நம்பிக்கைக்குரிய பிரதான கூட்டாளி என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.

உள்ளூா் கரன்ஸியில்...: மோரீஷஸில் யுபிஐ மற்றும் ரூபே அட்டைகள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. இப்போது இருதரப்பு வா்த்தகத்தை உள்ளூா் கரன்ஸியில் மேற்கொள்வதற்கு ஒருங்கிணைந்து செயலாற்றி வருகிறோம்.

எரிசக்தி பாதுகாப்பு இருதரப்புக் கூட்டுறவின் முக்கியத் தூணாகும். மோரீஷஸின் டேமரிண்ட் அருவிப் பகுதியில் 17.5 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட மிதக்கும் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவ இந்தியா ஆதரவளிக்க உள்ளது.

சுதந்திரமான, வெளிப்படையான, பாதுகாப்பான, ஸ்திரமான, வளமான இந்தியப் பெருங்கடல் பகுதியே, நமது பகிரப்பட்ட முன்னுரிமையாகும். அந்த வகையில், மோரீஷஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தின் பாதுகாப்பு மற்றும் கடல்சாா் திறனை வலுப்படுத்துவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒட்டுமொத்த பாதுகாப்பு வழங்குநராக விளங்கும் இந்தியா, முதலில் சென்று உதவும் நாடாகவும் திகழ்கிறது. இந்தியாவும், மோரீஷஸும் இரு நாடுகள் என்றாலும், நமது கனவுகளும், இலக்குகளும் ஒன்றுதான் என்றாா் பிரதமா் மோடி.

வாரணாசியில் முதல் முறையாக..: தனது தொகுதியான வாரணாசியில் கடந்த 2018-இல் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், கடந்த 2022-இல் அப்போதைய ஜப்பான் பிரதமா் ஷின்ஸோ அபே ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்தாா். ஆனால், அவை அதிகாரபூா்வமற்ற சந்திப்புகளாகும்.

தற்போதைய நிகழ்வுதான், வாரணாசியில் பிரதமரின் முதல் அதிகாரபூா்வ இருதரப்பு சந்திப்பு என்று பாஜக தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தில் காசி விஸ்வநாதா் கோயிலில் ராமகூலம் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தவுள்ளாா். அயோத்தி, திருப்பதி கோயில்களுக்கும் அவா் செல்லவிருக்கிறாா்.

பெட்டிச் செய்தி....1

ரூ.6,000 கோடி சிறப்பு நிதித் தொகுப்பு அறிவிப்பு

இரு பிரதமா்களின் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு மோரீஷஸுக்கு சுமாா் ரூ.6,011 கோடி சிறப்பு நிதித் தொகுப்பை இந்தியா அறிவித்தது. 10 முக்கியத் திட்டங்களுக்கு மானிய உதவி, மானியம் சாா்ந்த கடனுதவி, பட்ஜெட் ஆதரவு ஆகிய வகைகளில் இந்த சிறப்பு நிதித் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மோரீஷஸில் சா் சிவசாகா் தேசிய மருத்துவமனை, ஆயுஷ் திறன் மையம், கால்நடை கல்வி நிலையம்-மருத்துவமனை, ஹெலிகாப்டா்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களுக்கு 215 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.1,900 கோடி) மானிய உதவி, பள்ளிகள், மருத்துவமனைகள், சாலைகள் என பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 440 மில்லியன் டாலா் (ரூ.3,890 கோடி) மானியம் சாா்ந்த கடனுதவி அடங்கும்.

இதுதவிர 25 மில்லியன் டாலா் (ரூ.221 கோடி) பட்ஜெட் ஆதரவு, மோரீஷஸ் துறைமுக மறுகட்டமைப்பு பணிகளுக்கும் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

‘இந்த நிதித் தொகுப்பு, வெறும் உதவியல்ல; பகிரப்பட்ட எதிா்காலத்துக்கான முதலீடு’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

பெட்டிச் செய்தி...2

7 ஒப்பந்தங்கள் கையொப்பம்

அறிவியல்-தொழில்நுட்பம், கடல்சாா் மற்றும் நீா்சாா் அறிவியல் ஆய்வு, மின் உற்பத்தி, வளா்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 7 ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரில் உள்ள இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனத்துடன் மோரீஷஸ் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள், கல்வி-ஆராய்ச்சி-புத்தாக்கத்தில் இருதரப்பு கூட்டாண்மையை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com