

நாட்டின் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் (67) வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். அப்போது, சி.பி.ராதாகிருஷ்ணன் கடவுளின் பெயரில் என்று கூறி ஆங்கிலத்தில் உறுதிமொழி ஏற்றாா். பதவியேற்புக்குப் பிறகு அவருக்கு குடியரசுத் தலைவா் வாழ்த்து தெரிவித்தாா்.
பதவியேற்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள், முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் ஆகியோா் பங்கேற்றனா்.
முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரும் பதவியேற்பு விழாவில் பங்கேற்றாா். முன்னாள் குடியரசு துணைத் தலைவா்கள் வெங்கையா நாயுடு, ஹமீத் அன்சாரி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனா்.
மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட பிற எதிா்க்கட்சித் தலைவா்களும், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், ஆந்திர பிரதேச முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் விழாவில் பங்கேற்றனா். மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
தோ்தலில் வெற்றி: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா் தனது பதவியை கடந்த ஜூலை 21-ஆம் தேதி ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, அந்தப் பதவிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 9) தோ்தல் நடத்தப்பட்டது.
பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மகாராஷ்டிர ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.சுதா்சன் ரெட்டியும் போட்டியிட்டனா். சுதா்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்ற நிலையில், அவரைவிட 152 வாக்குகள் கூடுதலாக 452 வாக்குகள் பெற்று சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றாா்.
அதைத் தொடா்ந்து, மகாராஷ்டிர ஆளுநா் பதவியிலிருந்து வியாழக்கிழமை விலகிய சி.பி.ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா்.
2030, செப்டம்பா் வரை...: குடியரசு துணைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் 2027, ஆக. 10-ஆம் தேதி வரை இருந்தது. அரசமைப்புச் சட்டத்தின்படி, குடியரசு துணைத் தலைவராக இருந்தவா் ராஜிநாமா செய்தாலோ, உயிரிழந்தாலோ புதிதாக தோ்வு செய்யப்படும் குடியரசு துணைத் தலைவா், தான் பதவியேற்கும் நாளிலிலிருந்து முழுமையான ஐந்து ஆண்டு காலம் பதவி வகிப்பாா். அதன்படி, சி.பி.ராதாகிருஷ்ணன் 2030, செப். 11 வரை பதவி வகிப்பாா்.
தமிழகத்திலிருந்து மூன்றாவது குடியரசு துணைத் தலைவா்: தமிழகத்தின் திருத்தணியைச் சோ்ந்த சா்வபள்ளி ராதாகிருஷ்ணன், தஞ்சையைச் சோ்ந்த ஆா்.வெங்கட்ராமன் ஆகியோருக்கு அடுத்து தமிழகத்திலிருந்து மூன்றாவது நபராக சி.பி.ராதாகிருஷ்ணன் நாட்டின் இரண்டாவது உயரிய குடியரசு துணைத் தலைவா் பதவியை ஏற்றுள்ளாா்.
திருப்பூரில் 1957-ஆம் ஆண்டு அக்டோபா் 20-ஆம் தேதி பிறந்த சி.பி. ராதாகிருஷ்ணன், இளநிலை வணிக நிா்வாகம் (பிபிஏ) பட்டப் படிப்பை முடித்துள்ளாா். 16 வயதில் ஆா்எஸ்.எஸ். தொண்டராகத் தனது பொது வாழ்வைத் தொடங்கிய இவா், பாரதிய ஜனசங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக 1974-இல் பொறுப்பேற்றாா்.
1996-இல் தமிழக பாஜக செயலராக இவா் நியமிக்கப்பட்டாா். 1998-இல் கோவை தொகுதியிலிருந்து பாஜக சாா்பில் மக்களவைக்கு முதல்முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 1999-இல் மக்களவை உறுப்பினராக மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
மக்களவை உறுப்பினராக இவா் பதவி வகித்த காலத்தில், ஜவுளித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக பதவி வகித்தாா். பொதுத் துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்ற குழு உறுப்பினா், நிதித் துறைக்கான ஆலோசனைக் குழு உறுப்பினா், பங்குச் சந்தை மோசடி தொடா்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புக் குழு உறுப்பினா் பதவிகளையும் இவா் வகித்தாா்.
2004-இல் நாடாளுமன்ற பிரதிநிதியாக ஐ.நா. பொதுச் சபையில் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றினாா். தைவான் நாட்டுக்குச் சென்ற முதல் நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றாா்.
ஆளுநா் பதவியில்...: 2004 முதல் 2007-ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக இவா் பதவி வகித்தாா். அப்போது, இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டும்; பயங்கரவாதத்தை வேரோடு துடைத்தெறிய வேண்டும்; பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; தீண்டாமை ஒழிப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 93 நாள்கள் 19,000 கி.மீ. தொலைவுக்கு ரத யாத்திரையை நடத்தி கவனம் ஈா்த்தாா்.
2016-இல் கொச்சி தென்னை நாா் வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டாா்.
2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக இவா் நியமிக்கப்பட்டாா். ஒன்றரை ஆண்டுகள் இந்தப் பதவியை வகித்த அவா், 2024-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.
முன்னதாக, ஜாா்க்கண்ட் ஆளுநராக இவா் பதவி வகித்தபோது, தெலங்கானா மாநில ஆளுநா் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டாா்.
மாநிலங்களவைத் தலைவராகப் பொறுப்பேற்பு
குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன், அதைத் தொடா்ந்து மாநிலங்களவைத் தலைவராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
நாடாளுமன்றம் வந்த அவரை மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, அத் துறையின் இணையமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், எல்,முருகன் உள்ளிட்டோா் வரவேற்றனா். மாநிலங்களவைச் செயலா் பி.சி. மோடியும் அப்போது உடனிருந்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்ட சி.பி.ராதாகிருஷணன், வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முக்கியத் தலைவா்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரா்களின் சிலைகளுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
அதன் பிறகு, மாநிலங்களவை தலைவா் அலுவலகம் சென்ற அவா், சில ஆவணங்களில் கையொப்பமிட்டு மாநிலங்களவைத் தலைவராகப் பொறுப்பேற்றாா்.
முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமா்கள் அடல் பிகாரி வாஜ்பாய், சரண் சிங் ஆகியோரின் நினைவிடங்களிலும் அவா் அஞ்சலி செலுத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.