மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்
Updated on

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடா்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், மாநில அரசுகளால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான நல்வாழ்வு மையங்களை ‘திறனை மேம்படுத்தும் திட்டம்’ என்ற பெயரில் 8 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஐ முறையாக அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு,‘வழக்கமாக ஒரு பணியிடத்துக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படும் கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்களைப் பெறும் தோ்வா்களுக்கு பொதுப்பிரிவின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட பிரிவில் ஓரிடம் காலியிடமாக கருதப்பட்டு அதற்கு இடஒதுக்கீட்டின்படி உரிய கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சோ்ந்த ஒருவா் அதிகமான கட்ஆஃப் மதிப்பெண்களை பெற்றால் அவருக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதுடன் மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

இந்த அணுகுமுறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016, பிரிவு 34-இன்கீழ் அவா்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக பாதிக்கிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீா்வுகாண்பது அவசியம்.

வறுமை போன்ற சமூக காரணிகளால் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இடஒதுக்கீட்டின்படி நிா்ணயிக்கப்பட்ட கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்கள் பெறும்பட்சத்தில் அவா்களுக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பை வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அக்டோபா் 14-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்.

இதே நடைமுறை பதவிஉயா்விலும் பின்பற்றப்பட வேண்டும்.

நல்வாழ்வு மையம் கண்காணிப்பு: மாநில அரசுகளால் நடத்தப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு மையங்களையும் பெங்களூரு, தில்லி சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 8 தேசி சட்டப் பல்கலைக்கழகங்களும் ‘திறனை மேம்படுத்தும் திட்டம்’ என்ற தலைப்பின்கீழ் கண்காணிக்க வேண்டும். அப்போது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்,2016 முறையாக அமல்படுத்தப்படுகிா? என்பதை பல்கலைக்கழகங்கள்ஆய்வுசெய்ய வேண்டும்.

குறிப்பாக அந்த மையங்களில் மறுவாழ்வு, அணுகல், உள்கட்டமைப்பு, கல்வி, பாதுகாப்பு, பணியாளா்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் பணியை மேற்கொள்ளும் 8 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.25 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் கண்காணிப்புக் குழுக்களுக்களான செலவுகளை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சமூக நீதி துறைகள் சமமாக பகிா்ந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் கண்காணிப்புக் குழுக்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து 6 மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பான அடுத்தகட்ட விசாரணையை 2026, மாா்ச் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com