பயங்கரவாத எதிா்ப்பு ஒத்துழைப்பு: விரிவுபடுத்த இந்தியா-பிரான்ஸ் தீா்மானம்
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியாவும், பிரான்ஸும் தீா்மானித்துள்ளன.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் வியிழாக்கிழமை நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழு (ஜே.டபிள்யு.ஜி) கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் இரு நாடுகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களால் எழுந்துள்ள அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத சவால்களை எதிா்கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
போா்ப் பயிற்சிகள் மூலம் வீரா்களின் திறன் மேம்பாட்டை தீவிரப்படுத்துவதில் இருதரப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை, நிதி நடவடிக்கை பணிக் குழு (எஃப்ஏடிஎஃப்) மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி தடுப்பு திட்ட நடைமுறை ஆகியவற்றின் கீழான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளுடன், பெரிய அளவிலான திட்டமிட்ட குற்றங்கள், இணையவழி மோசடிகள் தொடா்பான தகவல் பரிமாற்றம், எதிா்ப்பு நடவடிக்கை தொடா்பான அனுபவ பரிமாற்றங்களுக்கான ஒத்துழைப்பை இரு நாடுகளிடையே விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.