
மணிப்பூரில் வன்முறை நடந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி அங்கு செல்வதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமரிசித்துள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களுடன் பேசிய பிரியங்கா காந்தி,
"2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி, மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகவும் முன்பாகவே மணிப்பூருக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கு இவ்வளவு நாள்களாக அசாதாரண சூழல் நிலவ அனுமதிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இவ்வளவு நாள் பிரதமர் மோடி அங்கு செல்லாமல் இருந்து, அங்கு பலர் கொல்லப்படவும் வன்முறை நடக்கவும் அனுமதித்துள்ளார். இந்திய பிரதமர்களின் வழக்கம் அப்படி இருந்ததில்லை. பிரதமர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் எங்கு பிரச்னை, துயரம் என்றாலும் அவர்கள் செல்வார்கள். சுதந்திரம் பெற்றதில் இருந்து பிரதமர்கள் அவ்வாறுதான் செய்திருக்கிறார்கள், அதுதான் பாரம்பரியமும்கூட. ஆனால் பிரதமர் மோடி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூருக்குச் செல்கிறார். அவர் முன்பே இதைப் பற்றி யோசித்து சென்றிருக்க வேண்டும்" என்று கூறினார்.
பிரதமரின் பயணம்
மிஸோரம், மணிப்பூா், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகாா் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13 முதல் 15 வரை) மூன்று நாள்கள் பிரதமா் மோடி பயணம் மேற்கொள்ளகிறார்.
இன்று காலை மிஸோரம் என்ற அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து அவர் மணிப்பூர் செல்லவிருக்கிறார். இதனால் அவரை வரவேற்கவும் பாதுகாப்புக்கும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் இன மோதல் தொடங்கிய பிறகு அந்த மாநிலத்துக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை முதல் முறையாக பயணிக்கவுள்ளாா். இன மோதலில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.
பிரதமா் மோடி மணிப்பூருக்கு பயணித்து, கள நிலவரத்தை அறிய வேண்டுமென எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி தற்போது மணிப்பூருக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.