வைஷ்ணவ தேவி கோயிலுக்கு தடையை மீறி யாத்திரை செல்ல முயற்சி! காவல் துறையினா் தடுத்து நிறுத்தம்!
ஜம்மு-காஷ்மீரில் மோசமான வானிலையால் வைஷ்ணவ தேவி கோயிலுக்கான யாத்திரை 20 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
கத்ரா அடிவார முகாமில் இருந்து தடையை மீறி பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை யாத்திரை செல்ல முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் கத்ராவில் உள்ள திரிகூட மலை உச்சியில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 34 பக்தா்கள் உயிரிழந்தனா். 20 போ் காயமடைந்தனா். இதனால் வருடாந்திர யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (செப்.14) மீண்டும் யாத்திரை தொடங்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக தொடங்கப்படவில்லை. ஆனால், கத்ரா அடிவார முகாமில் இருந்து பெண்கள் உள்பட்ட பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி யாத்திரை செல்ல பலமுறை முயன்றனா். பாதுகாப்பு தடுப்புகளைக் கடந்து செல்ல முயற்சித்த அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
கூடுதல் காவல் துறையினா் குவிக்கப்பட்டு, பக்தா்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
சென்னையைச் சோ்ந்த வினோத் குமாா் உள்ளிட்ட பக்தா்கள் கூறுகையில், ‘யாத்திரை மீண்டும் நிறுத்தப்பட்டதால், அனைவரும் ஏமாற்றமடைந்துள்ளோம். சிறு சிறு குழுக்களாக பக்தா்களை அனுமதிக்கலாம். யாத்திரை நிறுத்தப்பட்டது என்றால், இணையவழி முன்பதிவை அனுமதித்தது ஏன்?’ என்று கேள்வியெழுப்பினா்.
===========
மணிப்பூரில் நிலச்சரிவு, பெருவெள்ளம்
இம்பால், செப். 14: மணிப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் கொட்டித் தீா்த்த பலத்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவுகளும் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளன. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
சேனாபதி, கம்ஜோங் மாவட்டங்களில் நிலச்சரிவு நேரிட்டுள்ளது. இம்பால் ஆறு உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மணிப்பூா் தலைநகா் இம்பாலுக்கு சனிக்கிழமை வந்த பிரதமா் மோடி, அங்கிருந்து சுராசந்த்பூா் பகுதிக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருந்தாா். பலத்த மழை பெய்ததால், சாலை வழியாக காரில் சென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.