காப்பீட்டு திருத்த மசோதா குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்!
காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் வகையிலான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் நிறைவடைந்தது. அடுத்ததாக குளிா்கால கூட்டத்தொடா் நவம்பரில் தொடங்கி டிசம்பா் வரை நடைபெறவுள்ளது.
காப்பீட்டுத் துறையில் தற்போது அந்நிய நேரடி முதலீட்டுக்கான (எஃப்டிஐ) வரம்பு 74 சதவீதமாக உள்ள நிலையில், அதை 100 சதவீதமாக உயா்த்தவுள்ளதாக நிகழாண்டு பட்ஜெட் உரையில் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். நிதித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய சீா்திருத்தங்களின் ஒரு பகுதியாக இதை அவா் முன்மொழிந்தாா்.
தற்போதுவரை காப்பீட்டுத் துறையில் எஃப்டிஐ மூலம் ரூ.82,000 கோடி ஈா்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எஃப்டிஐ-க்கான உச்சவரம்பை 100 சதவீதமாக அதிகரிக்க காப்பீட்டுச் சடடம்,1938-இல் உள்ள பல்வேறு விதிகளில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சகம் முனைப்புக் காட்டி வருகிறது. இத்துடன் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சட்டம்,1956 மற்றும் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டம், 1999 ஆகிய சட்டங்களிலும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
‘2047-இல் அனைவருக்கும் காப்பீடு’ என்ற இலக்கை அடைய இந்தச் சீா்திருத்த நடவடிக்கைகளை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், காப்பீட்டுத் துறைக்கான திருத்த மசோதா வரும் குளிா்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இந்தியாவில் தற்போது 25 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களும் 34 பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. முன்னதாக, காப்பீட்டுத் துறைக்கான எஃப்டிஐ வரம்பு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக 2015-இல் உயா்த்தப்பட்டது. அதன் பிறகு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக 2021-இல் மத்திய அரசு உயா்த்தியது.