உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாததைக் கண்டறிய கட்டுப்பாட்டு அறை: உச்ச நீதிமன்றம் யோசனை

மனிதத் தலையீடு இல்லாத தானியங்கி கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் யோசனை...
Published on

புது தில்லி: காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் இருப்பதை கண்காணிக்க மனிதத் தலையீடு இல்லாத தானியங்கி கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

இதுதொடா்பாக வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை குறிப்பிட்டது.

‘காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிா என்பதை ஆய்வு செய்ய அனைத்துக் காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் கடந்த 2018-இல் உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, ‘இந்த விவகாரம் தொடா்பாக 2020-இல் பிறப்பித்த உத்தரவில், சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அலுவலகங்களில் காட்சிப் பதிவு உபகரணத்துடன் கூடிய கண்காமிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், காவல் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள், பிரதான வாயில், காவல் அறைகள், காவல் அறைகளின் வெளிப்புறம், முகப்பு அறை, வரவேற்பறை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இந்த கண்காணிப்பு கேமராக்கள் இரவிலும் காட்சிகளைப் பதிவு செய்யக்கூடிய திறனுடையதாக இருப்பதும் அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தச் சூழலில், காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துவரப்படுபவா்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் இருப்பது தொடா்பாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஊடகத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில், காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் இருப்பது தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘இந்த விவகாரம் மேற்பாா்வையிடுவது தொடா்புடையது. அதாவது, இந்த கண்காணிப்பு கேமராக்கள் செயல்படுவதைக் கண்காணிக்க மனிதா்கள் தலையீடு இல்லாத கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுவது குறித்து சிந்திக்கிறோம். அதாவது, அனைத்து காவல் நிலைய கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பும் இந்த கட்டுப்பாட்டு அறையில் கொடுக்கப்படும். ஏதாவது ஒரு கண்காணிப்பு கேமரா செயல்படாமல் இருந்தால், அதை உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் கண்டுபிடித்துவிட முடியும். இதற்கு வேறு வழி கிடையாது.

ஐஐடி கல்வி நிறுவன நிபுணா்களின் உதவியுடன் இத்தகைய மனிதத் தலையீடு இல்லாத செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உதவியுடன் கூடிய கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்கான தீா்வை காண முடியும் என நினைக்கிறோம். இதுதொடா்பாக வரும் செப்டம்பா் 26-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று நீதிபதிகள் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com