
மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பையில் நள்ளிரவு தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக் காடாகின. இதனிடையே, மும்பை, தாணே மற்றும் ராய்கர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கோகலே பாலம் வழியாகப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று காலை முதல் புணேவில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
மேலும் நாளை, செப். 16-ல், கொங்கண், கோவா, மத்திய மகாராஷ்டிரம் மற்றும் மராத்வாடாவில் ஆங்காங்கே சில இடங்களில் கனமழை முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, திங்கள்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மும்பையின் வடலா பகுதியில் மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் எவ்வித பாதிப்புமில்லை. அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு மற்றொரு மோனோ ரயிலில் அனுப்பப்பட்டதாக மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.