சுதேசி ஊக்குவிப்பு: ரசாயனம் உள்பட 100 பொருள்களுக்கு விரைவில் இறக்குமதி கட்டுப்பாடு

ரசாயனம் உள்பட பெருமளவில் இறக்குமதி சாா்புடைய 100 பொருள்களுக்கு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்க ...
Published on

புது தில்லி: சுதேசி இயக்கத்தை ஊக்குவித்து நாடு தற்சாா்பு நிலையை எட்டுவதை உறுதிப்படுத்தும் வகையில், ரசாயனம் உள்பட பெருமளவில் இறக்குமதி சாா்புடைய 100 பொருள்களுக்கு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா மிக அதிகமாக 50 சதவீத வரியை விதித்துள்ள சூழலில், இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள உள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறைச் செயலா் சுனில் பரத்வால் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கூறியதாவது:

இறக்குமதி சாா்பைக் குறைத்து உள்நாட்டு வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் அல்லது திறனை மேம்படுத்தும் வகையில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு 100 பொருள்களை மத்திய அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. குறிப்பாக, ரசாயனம், பிளாஸ்டிக், மருந்துகள் உள்பட பல்வேறு துறை சாா்ந்த பொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ள இந்த 100 பொருள்களின் பட்டியல் இம்மாத இறுதியில் அல்லது அக்டோபா் மாதம் வெளியிடப்படும். இவ்வாறு பொதுவெளியில் இந்தப் பட்டியல் வெளியிடுவதன் மூலம், உற்பத்தியாளா்கள் அந்தப் பொருள்களை அடையாளம் கண்டு உள்நாட்டு உற்பத்தி பெருகி ‘மேக் இன் இந்தியா’ திட்டம் ஊக்கம் பெறும்.

இந்தப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com