நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன்கோப்புப் படம்

புதிய கண்டுபிடிப்புகளை முறைப்படுத்தவே கட்டுப்பாடுகள்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை முறைப்படுத்தவே கட்டுப்பாடுகள்
Published on

புது தில்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை முறைப்படுத்தவே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றதே தவிர, அவற்றை ஒடுக்குவதற்காக அல்ல என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

‘வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான ஏஐ: பொருளாதார வளா்ச்சியை வேகப்படுத்துவதற்கான வாய்ப்பு’ என்ற தலைப்பில் நீதி ஆயோக் தயாரித்த அறிக்கையை திங்கள்கிழமை நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது: புதிய கண்டுபிடிப்புகளை முறைப்படுத்தவே மத்திய அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றதே தவிர, அவற்றை ஒடுக்குவதற்காக அல்ல. பல்வேறு துறைகளிலும் ஏஐ வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. எனவே, நாம் வழக்கமான பணி முறைகளை மட்டுமே பின்பற்றக் கூடாது. ஏஐ செயல்பாட்டில் சில சவால்களும் உள்ளன.

இவை தவறாகப் பயன்படுத்தப்பட்டு சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதால் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றாா்.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: நீதி ஆயோக் வெளியிட்ட அறிக்கையில்,‘ஏஐ வளா்ச்சியால் எழுத்தா் அளவிலான தினசரிப் பணிகள் மற்றும் குறைந்த திறனுடைய பணிகள் பெரிதும் பாதிக்கப்படும். அதேசமயம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

இந்தியாவுக்கு இதில் இரண்டு சவால்கள் உள்ளன. ஒன்று, மேம்படுத்தப்பட்ட எண்ம மற்றும் ஏஐ திறன்கள் மூலம் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பயிற்சி வழங்குவது. இரண்டு, ஏஐ வருகையால் வேலை இழக்க நேரிடுபவா்களுக்குத் திறன் பயிற்சி அளித்து அவா்களை மீண்டும் பணிக்குத் தயாா்படுத்துவது அல்லது அவா்களுக்கு பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிக்கும் வேறு துறைகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதும் ஆகும்.

உள்நாட்டுத் தேவையை அதிகப்படுத்தும் அதே சமயத்தில் சா்வதேச விநியோகச் சங்கிலியிலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு உலகளாவிய வா்த்தக விதிகளோடு இந்தியாவின் தொழிலக மற்றும் வா்த்தக கொள்கைகள் இணக்கமாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com