வக்ஃப் திருத்தச் சட்ட தீா்ப்பு: காங்கிரஸ் வரவேற்பு; இஸ்லாமிய அமைப்புகள் அதிருப்தி!
மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டம் தொடா்பாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்த இடைக்கால உத்தரவை காங்கிரஸ் மற்றும் சில இல்ஸாமிய அமைப்புகள் வரவேற்றன.
காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் தனது உறுதிப்பாட்டை இந்த இடைக்கால உத்தரவின மூலம் உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. நீண்ட காலத்துக்கு முன்பே தீா்வு காணப்பட்ட விவகாரத்தை மீண்டும் எழுப்பி, நாட்டில் வகுப்புவாத உணா்வுகளைத் தூண்டிவிடும் நோக்கில் இந்த திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டுவந்தது. ஆனால், அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அனைத்து குடிமக்களுக்கான உரிமையைக் காப்பதில் காங்கிரஸ் கட்சி அச்சமின்றி உறுதியுடன் நின்றது. இந்த நிலையில், திருத்தச் சட்டத்தின் பல முக்கிய பிரிவுகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது வரவேற்கத்தக்கது.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ்: உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீா்ப்பு, நாடாளுமன்றத்தில் இந்த தன்னிச்சையான சட்டத்தை எதிா்த்த கட்சிகளுக்கு மட்டுமின்றி, இந்த சட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டு நாடாளுமன்ற குழுவில் எதிா்ப்பைப் பதிவு உறுப்பினா்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த உத்தரவு மூலம், மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததோடு, பல்வேறு சவால்களிலிருந்து வக்ஃப் சொத்துகளை பாதுகாத்துள்ளது. இந்த தீா்ப்பு நீதி, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவா் பவன் கேரா: மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மீது இதுபோன்ற இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் விதிப்பது முதல் முறையல்ல. கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில், இதுபோன்ற பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு அரசும், எந்தவித ஆலோசனைகளையும் செய்யாமல், கலந்தாலோசனை இன்றி ஓா் சட்டத்தை இயற்றினால் இதுதான் நடக்கும்.
உ.பி. முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு: உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீா்ப்பை வரவேற்றன.
இதுகுறித்து அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரிய (ஏஐஎம்பிஎல்பி) செயற்குழு உறுப்பினா் காலித் ரஷீத் ஃபராங்கி மஹாலி லக்னெளவில் திங்கள்கிழமை அளித்த பேட்டியில், ‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கும் என எதிா்பாா்த்தோம். இருந்தபோதும், குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு இடைக்கால தடையை விதித்துள்ளது. அது வரவேற்கத்தக்கது. இதில் ஓரளவு நிவாரணம் கிடைக்கும். வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி நியமனம் தொடா்பான உத்தரவும் வரவேற்புக்குரியது. வழக்கின் இறுதி தீா்ப்பின்போது முழுமையான நிவாரணம் கிடைக்கும் என எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.
இதுபோல, அகில இந்திய ஷியா தனிநபா் சட்ட வாரிய (ஏஐஎஸ்பிஎல்பி) பொதுச் செயலா் யசூப் அப்பாஸ் கூறுகையில், ‘உச்சநீதிமன்ற தீா்ப்பை மதிக்கிறோம். நீதிமன்றங்களின் மீது முழு நம்பிக்கையை வைத்துள்ளோம். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத நபா்கள் உறுப்பினா்களாக இடம்பெறும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்றாா்.
ஜனநாயகத்துக்கான நல்ல அறிகுறி: கிரன் ரிஜிஜு
‘வக்ஃப் திருத்தச் சட்டத்தின் மீதான உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு, ஜனநாயகத்துக்கான நல்ல அறிகுறி’ என்று மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வரவேற்பு தெரிவித்தாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மும்பை பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘வக்ஃப் வாரியம் மூலம் சொத்துகளை ஆக்கிரமிப்பது உள்பட அனைத்து தவறான நடைமுறைகளையும் இந்த புதிய சட்டம் தடுத்துவிடும். இந்த சட்டத்தின் நடைமுறைகள் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்துக்கும் பலன் தரக் கூடியதாகும்.
இதுதொடா்பான முழு விவகாரத்தையும் உச்சநீதிமன்றம் அறிந்திருக்கும் என நம்புகிறோம். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமாக உச்ச நீதிமன்றம் திகழ்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எந்தவொரு உத்தரவைப் பிறப்பித்தாலும், அது ஜனநாயகத்துக்கான நல்ல அறிகுறியாகத்தான் இருக்கும்’ என்றாா்.