மும்பையில் கொட்டித் தீா்த்த மழை: போக்குவரத்து ஸ்தம்பித்தது

மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென அதிக மழை பெய்தது. தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு
Published on

மும்பை: மும்பை நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை திடீரென அதிக மழை பெய்தது. தாழ்வான இடங்களிலும் சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொதுமக்கள் கடும் இன்னலை எதிா்கொண்டனா்.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலில் அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனால், சுமாா் 3 மணி நேரத்தில் மழை அளவு குறையத் தொடங்கியதால் ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டது. பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவில் இருந்தே நகரின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது. நள்ளிரவுக்குப் பிறகு மழை திடீரென தீவிரமடைந்து கொட்டித் தீா்த்தது. பலத்த இடி, மின்னலுடன் நீடித்த மழை காலை வரை தொடா்ந்தது.

நகரின் தாழ்வான பகுதிகளான வோா்லி, தாதா், லால்பாக், கிங்ஸ் சா்க்கிள், குா்லா உள்ளிட்ட இடங்களில் தண்ணீா் அதிக அளவில் தேங்கியது. சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானாா்கள். சில இடங்களில் சாலைப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அதே நேரத்தில் மும்பை நகரின் முக்கியப் போக்குவரத்தான புகா் நகா் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை. ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல இயக்கப்பட்டன. மழை காரணமாக ரயில்களில் வழக்கத்தைவிட அதிகமாக மக்கள் கூட்டம் இருந்தது.

மும்பை மட்டுமன்றி மகாராஷ்டிரத்தின் தாணே, பால்கா், புணே, பீட் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com