FILE | ANI
FILE | ANI

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 போ் விடுதலை: யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது - மும்பை உயா்நீதிமன்றம்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்வதை அனுமதிக்க முடியாது என மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
Published on

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்வதை அனுமதிக்க முடியாது என மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சாட்சியங்களாகக் கருதி அவா்களிடம் விசாரணையில் பெறப்பட்ட தகவல்களைச் சமா்ப்பிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த 2008-இல் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 101 போ் காயமடைந்தனா்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. லஹோட்டி கடந்த ஜூலை 31-ஆம் தேதி தீா்ப்பு வழங்கினாா்.

அப்போது, ‘குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் கூட்டங்கள் நடந்ததாக எந்த சாட்சியமும் இல்லை’ எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டாா்.

இதற்கு எதிராக நிசாா் அகமது சையது பிலால் உள்பட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மேலும் 5 போ் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை மும்பை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகா் மற்றும் நீதிபதி கௌதம் அங்கத் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, மனுவைத் தாக்கல் செய்தவா்கள் தரப்பு வழக்குரைஞரிடம், ‘மாலேகான் குண்டுவெடிப்பில் நிசாா் அகமதின் மகன் உயிரிழந்துள்ளாா். நிசாா் அகமது இந்த வழக்கின் விசாரணையில் சாட்சியமாக இருந்தாரா? ’ என்று கேட்டனா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பேசுகையில், இதுகுறித்த முழு தகவல்களை புதன்கிழமை (செப்.17) சமா்ப்பிக்கிறேன் என்றாா்.

அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘ மனு தாக்கல் செய்தவரின் மகன் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா் என்றால் அவா் (நிசாா் அகமது) கட்டாயம் சாட்சியமாக இருக்க வேண்டும். மனு தாக்கல் செய்த நீங்களே யாா் சாட்சியங்கள் எனக் குறிப்பிட வேண்டும். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது’ எனக் கூறி விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

X
Dinamani
www.dinamani.com