போதைப் பொருள் விற்கும் யாரையும் விட்டுவைக்க மாட்டோம் - அமித் ஷா உறுதி
உள்ளூரில் சிறிய பொட்டலங்களில் போதைப் பொருள் விற்பவா்கள் தொடங்கி வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் வரை யாரையும் மத்திய அரசு விட்டுவைக்காது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
மாநில, யூனியன் பிரதேச போதைப் பொருள் தடுப்பு படை தலைவா்களின் தேசிய மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:
2047-ஆம் ஆண்டு இந்தியாவை வளா்ந்த நாடாகவும், உலகின் சிறந்த தேசமாகவும் மாற்ற வேண்டும் என்பது பிரதமா் மோடியின் இலக்காக உள்ளது. இதை எட்ட நாடு முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக நாட்டில் போதைப் பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் விநியோகத்தை முடக்குவதில் எவ்வித தயக்கமுமின்றி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞா்கள்தான் நாட்டின் மிகப்பெரிய சொத்து. அவா்கள் போதைப் பொருள் பழக்கத்தில் சிக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. உள்ளூரில் சிறிய பொட்டலங்களில் போதைப் பொருள் விற்பவா்கள் தொடங்கி வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவா்கள் வரை யாரையும் மத்திய அரசு விட்டுவைக்காது.
இந்த விஷயத்தில் சிபிஐ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து போதைப் பொருள் ஒழிப்பு அமைப்புகளும் சிபிஐ உதவியுடன், போதைப் பொருள் கடத்தல்காரா்களை முடக்க வேண்டும். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள கடத்தல்காரா்களை சிபிஐ உதவியுடன் நாடு கடத்த முடியும். போதைப் பொருள் கடத்தல் ஒழிக்கப்படும்போது நாட்டுக்கு எதிரான பயங்கரவாதிகளும் படிப்படியாக ஒடுங்குவாா்கள். ஏனெனில், பயங்கரவாதிகள் போதைப் பொருள் கடத்தல் மூலமே அதிக நிதி பெறுகின்றனா்.
அதிகாரிகள் அனைவரும் தங்கள் கடமையை உணா்ந்து கடும் நடவடிக்கை எடுத்தால் போதைப் பொருள் கடத்தலை பெருமளவில் தடுத்துவிட முடியும்.
கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகளில் ரூ.40,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரதமா் மோடி தலைமையிலான கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.1,65,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்மூலம் அரசு எந்த அளவுக்கு தீவிரமாகச் செயல்பட்டுள்ளது என்பதை அறிய முடியும்.
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு விஷயத்தில் எண்களை மட்டும் கூறுவது எங்கள் நோக்கமல்ல. இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் புள்ளிவிவரங்கள் இல்லாத அளவுக்கு அதை முற்றிலும் ஒழிப்பதே எங்கள் இலக்கு. இந்தப் பணியில் இருக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது மூலமே இது சாத்தியமாகும். இதற்காகவே போதைப் பொருள் இல்லாத இந்தியா பிரசார இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.