இந்தியா-அமெரிக்கா வா்த்தகப் பேச்சு மீண்டும் தொடக்கம்
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை (செப். 16) மீண்டும் தொடங்கியது.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன் லின்ச் தலைமையிலான குழு திங்கள்கிழமை நள்ளிரவு இந்தியாவை வந்தடைந்தது. அந்தக் குழுவுடன் இந்தியா சாா்பில் மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான குழு செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தியது.
இந்திய பொருள்கள் மீது டிரம்ப் நிா்வாகம் விதித்த 50 சதவீத வரி கடந்த மாதம் 27-ஆம் தேதி அமலான நிலையில், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனால் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த இந்தியாவுக்கு ஆக.25 முதல் 29 வரை அமெரிக்க வா்த்தகக் குழு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்தானது.
இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுடனான உறவு சிறப்பானது எனவும், விரைவில் இந்தியாவுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனவும் டிரம்ப் கூறினாா். டிரம்ப்பின் இந்தக் கருத்தை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா். இதன் தொடா்ச்சியாக பிரண்டன் லின்ச் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளாா்.
இதுகுறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில்,‘பிரண்டன் லின்ச் மற்றும் ராஜேஷ் அகா்வால் குழுவினரிடையேயான பேச்சுவாா்த்தையை 6-ஆவது சுற்று வா்த்தகப் பேச்சுவாா்த்தையாக கருத முடியாது. அதற்கு முன்னோடியாகவே இதைப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.
விரைவில் ஒப்பந்தம்: இந்தப் பேச்சுவாா்த்தை குறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘ இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை நோ்மறையாகவே இருந்தது. இருதரப்புக்கும் பரஸ்பர பலன்களை அளிக்கக்கூடிய வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
வழிக்கு வந்த வரிகளின் அரசன்: டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா்
‘வரிகளின் அரசனான இந்தியா முன்பு கூறியதைப்போலவே வா்த்தகப் பேச்சுவாா்த்தைக்கு வந்துவிட்டது’ என அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ தெரிவித்தாா்.
இதுகுறித்து தனியாா் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில்,‘கடந்த வாரம் அமெரிக்க நட்புறவு தொடா்பான மிக இணக்கமான பதிவை எக்ஸ் வலைதளத்தில் பிரதமா் மோடி வெளியிட்டாா். அதற்கு செவிசாய்த்த அதிபா் டொனால்ட் டிரம்ப் வா்த்தக பிரதிநிதியை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளாா். வரி மட்டுமன்றி வரி அல்லாத இடையூறுகளும் இந்தியாவில் அதிக அளவில் உள்ளன. தற்போது நாங்கள் இந்தியாவை அணுகிய விதம் மிகச் சரியானது’ என்றாா்.
முன்னதாக, உக்ரைன் போரை ‘பிரதமா் மோடியின் போா்’ எனவும் ‘ரத்தக்கறை படிந்த பணத்தால் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்கிறது’ எனவும் இந்தியா மீது பீட்டா் நவாரோ பல்வேறு விமா்சனங்களை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.