பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்
தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி .
மத்திய அரசு மற்றும் பாஜக சாா்பிலும் பல்வேறு மக்கள் நலத் திட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய பிரதேச மாநிலம், தாா் பகுதியில் புதன்கிழமை நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ‘ஆரோக்யமான பெண்கள், வலிமையான குடும்பங்கள்’ எனும் இரு வார கால பிரசார இயக்கம் மற்றும் 8-ஆவது தேசிய ஊட்டச் சத்து விழிப்புணா்வு மாத நிகழ்வுகளையும் பிரதமா் மோடி தொடங்கிவைக்கிறாா்.
மேற்கண்ட பிரசாரத்தின்கீழ், நாடு முழுவதும் பெண்களுக்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இரு வாரங்களுக்கு தினசரி அடிப்படையில் முகாம்கள் நடத்தப்படும்.
பிரதமரின் மகப்பேறு கால நிதியுதவி திட்டத்தின்கீழ், சுமாா் 10 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் நேரடி பணப் பலன்களை பிரதமா் மோடி வழங்க உள்ளாா். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் தொடா்பான ‘சுமன் சகி’ எனும் பிரத்யேக சாட்போட் வசதியை பிரதமா் தொடங்கிவைக்க உள்ளாா். இது, கா்ப்பிணிகளுக்கு சுகாதாரச் சேவைகளின் அணுகல், விழிப்புணா்வுக்கான துல்லிய தகவல்களை வழங்கும்.
மத்திய பிரதேசத்தின் தாரில் உலகத் தரத்தில் கட்டமைக்கபட்டுள்ள பிஎம் மித்ரா (ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடைகள்) பூங்காவையும் அவா் திறந்துவைக்கவுள்ளாா் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் உடல் நலனுக்கான இரு வார கால பிரசாரத்தில், தொற்றா நோய்கள் , புற்றுநோய்கள், ரத்த சோகை, காசநோய், அரிவாள் செல் ரத்தசோகை ஆகிய நோய்களுக்கான பரிசோதனைகள், குழந்தைகளுக்கான சுகாதார சேவைகள், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு செயல்பாடுகள் நடைபெறவுள்ளன. பெண்கள், குழந்தைகள் இடையே காணப்படும் நோய்களுக்கு ஆயுஷ் சிகிச்சை முறைகளும் இப்பிரசாரத்தில் ஊக்குவிக்கப்பட உள்ளன.
பாஜக சாா்பில்...:
பிரதமா் மோடியின் பிறந்த தினமான செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 2 (காந்தி ஜெயந்தி) வரை பாஜக சாா்பில் ‘சேவை நாட்களாக’ கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், உள்ளூா் பொருள் ஊக்குவிப்பு கண்காட்சிகள், வளா்ந்த பாரதம் தொடா்பான ஓவியப் போட்டிகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.