
பிரதமர் மோடி தலைமையிலான அரசை விமர்சித்தும் ராகுல் காந்தியைப் புகழ்ந்தும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி கருத்து தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர்கள் இடையிலான மாண்பைக் குறைக்கும் சமீபத்திய நடவடிக்கைகளானது, இப்போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியலை விளையாட்டிலும் தலையிடச் செய்திருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான லீக் சுற்று ஆட்டம் கடந்த ஞாயிற்றுகிழமை நடைபெற்றபோது, டாஸ் சுண்டும் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை.
டாஸ் சுண்டப்பட்டதும் பாகிஸ்தானுக்கு சாதகமாக நாணயம் முகம் காட்ட, டாஸை வென்ற உற்சாகத்துடன் பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் சல்மான் அகா இந்தியாவை முதலில் பந்துவீச பணித்தார். அதனைத்தொடர்ந்து, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேராக பெவிலியனுக்கு திரும்பினார். எதிரணி கேப்டனுக்கு வாழ்த்து தெரிவிக்கவோ கை குலுக்கவோ இல்லை.
இந்த ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. களத்தில் கடைசி வரை நின்று இந்திய அணி வெற்றி இலக்கை எட்டச் செய்த சூர்யகுமார் யாதவும் ஷிவம் துபேவும் ஆட்டம் முடிவடைந்ததும், எதிரணி வீரர்கள் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க வரும் வரைகூட அவர்களுக்கு அவகாசம் அளிக்காமல் நேராக பெவிலியனில் உள்ள ஓய்வறைக்கு மிடுக்காக நடைபோட்டனர். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது!
இந்த நிலையில், இந்திய அணியின் செயலை விமர்சித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிதி அந்நாட்டின் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
“ஆசிய கோப்பை ஆரம்பமான முதலே, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகத்தில் பலமாக பிரசாரம் செய்யப்பட்டு வந்தது. மக்கள் மத்தியிலிருந்து வெளிப்பட்ட கடும் அழுத்தத்தால், இந்திய அணி வீரர்களுக்கும் அதேபோல பிசிசிஐ-க்கும் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தல் தலைமையிடமிருந்து வழங்கப்பட்டிருக்கிறதாக அறிகிறேன்.
இதில், இந்திய வீரர்களை நான் குற்றம்சுமத்த விரும்பவில்லை; அவர்களுக்கு மேலிடம் அறிவுறுத்தியதை கேட்டு நடக்கின்றனர்”.
“இந்த அரசு (அதாவது, இந்திய அரசு) மதம் என்ற துருப்புச்சீட்டை கையிலெடுத்துக்கொண்டு விளையாடுவதை நான் திரும்பத்திரும்பச் சொல்லி வருகிறேன். அவர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக ‘முஸ்லிம் - ஹிந்து’ துருப்புச்சீட்டை பயன்படுத்துகின்றனர். இதுவொரு தரக்குறைவான மனப்பாங்காகும்”.
“ராகுல் காந்தியிடம் நேர்மறையான மனப்பாங்கு இருக்கிறது. அவர் ஒவ்வொருத்தருடனும் பேச விருப்பப்படும் மனிதர், ஒட்டுமொத்த உலகத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புபவர்” என்றார்.
மேலும் அவர், அடுத்த இஸ்ரேல் ஆக இந்தியா மாறி வருகிறது என்று மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.