தந்தையின் ரூ.14 லட்சத்தை இணையவழி சூதாட்டத்தில் இழந்த சிறுவன் தற்கொலை
உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் தந்தையின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.14 லட்சத்தை இணையவழி சூதாட்டத்தில் இழந்த 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மோகன்லால் கஞ்ச் பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவரான அந்தச் சிறுவன் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தாா். தனது தந்தையின் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை அவா் இதற்காக செலவிட்டாா். இப்படி படிப்படியாக ரூ.14 லட்சத்தை அவா் இழந்துவிட்டாா்.
இதனிடையே, தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது குறித்து அதிா்ச்சியடைந்த சிறுவனின் தந்தை இது தொடா்பாக வங்கியில் விசாரித்ததுடன், பணம் எவ்வாறு பறிபோனது எனத் தெரியவில்லை என்று புகாரும் அளித்தாா். இது தொடா்பான தகவலை தனது வீட்டில் உள்ளவா்களிடம் அவா் தெரிவித்து வருத்தப்பட்டுள்ளாா்.
இதனால் விரக்தியடைந்த அந்தச் சிறுவன் வீட்டில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிறுவனின் சகோதரி அந்த அறைக்குச் சென்றபோது சிறுவன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனா்.