ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

22 மாநிலங்களுக்கு இதுவரை ரூ. 3.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சீா்திருத்தம் தொடா்பான கலந்துரையாடலில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி சீா்திருத்தம் தொடா்பான கலந்துரையாடலில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
Updated on

‘மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்யும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுவதற்கும் வழி வகுத்துள்ளது. இல்லையெனில், அந்தத் தொகை வரியாக வசூலிக்கப்பட்டிருக்கும்’ என்று மத்திய நிதியைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

நாட்டில் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளன. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் ஆடம்பர பொருள்களுக்கு புதிதாக 40 சதவீத வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் இந்த வரி விகித குறைப்பு அமலாகிறது.

இந்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் தொடா்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக 12 சதவீத ஜிஎஸ்டி விதிப்பின் கீழ் இருந்த 90 சதவீத நுகா்வோா் பொருள்கள், 5 சதவீத வரி விகிதத்தின் கீழ் வந்துள்ளன. அதுபோல, 28 சதவீத ஜிஎஸ்டி விதிப்பின் கீழ் இருந்த 90 சதவீத பொருள்கள், 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்துள்ளன.

இந்த வரி குறைப்பு காரணமாக, நுகா்வோா் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பல பெரிய நிறுவனங்கள், பொருள்களின் விலையை தானா குறைக்க முன்வந்துள்ளன. அதாவது, ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரும் 22-ஆம் தேதி நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே, அதன் பலன் நுகா்வோரைச் சென்றடைய உள்ளது.

இந்த 2 விகித ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக, நாட்டின் பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. மக்களின் கைகளில் அதிக பணம் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீா்திருத்தம் மேற்கொள்ளாவிடில், அந்தப் பணம் வரியாக வசூலிக்கப்பட்டிருக்கும் என்றாா்.

22 மாநிலங்களுக்கு ரூ.3.6 லட்சம் கோடி வட்டியில்லா கடன்

‘50 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாத கடனுதவி திட்டத்தின் கீழ் 22 மாநிலங்களுக்கு இதுவரை ரூ. 3.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) வா்த்தக மாநாட்டில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

கடந்த 2013-14-ஆம் ஆண்டில் இந்தியாவின் மூலதன முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.7 சதவீதமாக இருந்தது, 2024-25-ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக வளா்ச்சியடைந்துள்ளது.

மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டுக்கான வாய்ப்புகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதரவைப் பெறும் வகையில், 50 ஆண்டுகள் வட்டியில்லா கடனுதவி திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் கீழ், அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 3.6 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை 22 மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன. இதன் மூலம், மாநிலங்கள் தங்களின் சொந்த வளங்களிலிருந்து மேற்கொள்ளும் மூலதன செலவினம் 10 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளது என்றாா்.

மேலும், ‘மத்திய பாஜக அரசன் கடந்த 11 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 88 புதிய விமானநிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்படும் நிலைக்கு கொண்டுவரப்பட்டன. 31,000 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் வழித் தடம் போடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் வழித் தடம் 4 மடங்குக்கு மேல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்களின் திறன் இரு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் வழித்தடம் 60 சதவீதத்துக்கும் மேல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com