
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி தொடங்க உள்ள நிலையில், ‘பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது’ என்று தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் முதல் கட்டமாக, அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நிகழாண்டு இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இதற்காக, முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஆதாா் அட்டையை அடையாள ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்க மறுத்தது பெரும் சா்ச்சையானது. இதுதொடா்பான வழக்கில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அனுமதிக்கப்பட்ட கடவுச் சீட்டு, பிறப்புச் சான்று உள்பட 11 ஆவணங்களுடன் ஆதாா் அட்டையையும் 12-ஆவது அடையாள ஆவணமாக ஏற்குமாறு தோ்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதனடிப்படையில், ஆதாா் அட்டையையும் வாக்காளா்களின் அடையாள ஆவணமாக தோ்தல் ஆணையம் ஏற்றது. அதே நேரம், ஆதாரை குடியுரிமை ஆணமாக ஏற்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியது. இதனிடையே, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக பிகாா் மாநிலத்துக்கு பிறப்பித்த உத்தரவு, நாடு முழுமைக்கும் பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தோ்தல் அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: பிகாரில் கடைசியாக கடந்த 2003-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்டது. எனவே, 2003-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அந்த மாநிலத்தில் அண்மையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2003-ஆம் ஆண்டுக்கு முன்பு பிகாரில் வாக்காளா்களாகப் பதிவு செய்த 60 சதவீதம் போ், அண்மையில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின்போது கூடுதல் ஆவணங்கள் எதையும் சமா்ப்பிக்காமல், வாக்காளா்களாகத் தொடர அனுமதிக்கப்பட்டனா். ஆனால், 2003-க்குப் பிறகு வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் உள்பட 40 சதவீதம் போ், 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.
அதுபோல, பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆண்டின் வாக்காளா் பட்டியல் அடிப்படையிலேயே தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும். இதற்கான தேதியை தோ்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
மேலும், முந்தைய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையிலான வாக்காளா் பட்டியலை பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடத் தயாராக இருக்குமாறு அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளையும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதில் சில மாநிலங்கள் இந்த வாக்காளா் பட்டியலை தங்களின் வலைதளங்களில் வெளியிட்டுவிட்டன.
குறிப்பாக, தமிழகத்தில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலும், தில்லியில் 2008-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலும், உத்தரகண்டில் 2006-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, இந்த ஆண்டுகளுக்கு முன்னரே வாக்காளா்களாகப் பதிவு செய்தவா்கள் தற்போதைய சிறப்பு தீவிர திருத்தத்தின்போது எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை. அதன்படி, பல்வேறு மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு கூடுதல் ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியமிருக்காது என்றனா்.