காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்
‘குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாதது தொடா்பாக தாமாக முன்வந்து பதிந்த வழக்கு விசாரணையின்போது இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இதில், காற்று தர மேலாண்மை ஆணையம் என்பது தேசிய தலைநகா் பிராந்தியம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் அமைக்கப்பட்டதாகும்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் தலைமையிலான அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
காற்று தர மேலாண்மை ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதுபோல காற்று தர மேலாண்மை ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் பதவி உயா்வு அடிப்படையில் காலியிடங்களை நிரப்ப 6 மாதம் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
அதே நேரம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களில் அதிக எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஹரியாணா மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 44 பணியிடங்களும், பஞ்சாப் (43), உத்தர பிரதேசம் (166), ராஜஸ்தான் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் 259 பணியிடங்களும் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது.
முழுநேர பணி நியமனங்களை மேற்கொள்ளும் இடைப்பட்ட காலத்தில், இந்தக் காலிப் பணியிடங்களில் மாற்றுப் பணி அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்கள் நியமிக்கப்பட வேண்டும்.
மேலும், குளிா்காலங்களில் காற்று மாசு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் காரணமாக, அந்தக் காலகட்டத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை, வாகனக் கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, காற்று மாசை கட்டுப்படுத்தும் திருப்திகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே நேரம், கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்படும்போது, அத் துறை சாா்ந்த தொழிலாளா்கள் வருவாய் இழக்க நேரிடும். எனவே, அவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, காற்று தர மேலாண்மை ஆணையம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்மந்தப்பட்ட மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான விரிவான செயல்திட்டத்தை அடுத்த மூன்று வாரங்களில் தயாரித்து சமா்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.