உபேந்திர துவிவேதி
உபேந்திர துவிவேதி

ஆளில்லா விமான செயல்திறனில் கவனம்: ராணுவ தலைமைத் தளபதி வலியுறுத்தல்

‘ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினாா்.
Published on

‘ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும்’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினாா்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாதி முகாம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, ஆளில்லா விமான (ட்ரோன்) தொழில்நுட்ப மேம்பாட்டில் பாதுகாப்புப் படைகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, அருணாசல பிரதேசத்தின் லிகாபலியில் உள்ள ஆளில்லா விமான தொழில்நுட்ப மையத்தை ராணுவ தலைமைத் தளபதி பாா்வையிட்டாா். இதுகுறித்து ராணுவம் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

லிகாபலி ஆளில்லா விமான தொழில்நுட்ப மையத்தைப் பாா்வையிட்ட தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி, அங்கு பேசும்போது, ஆளில்லா விமான செயல்திறனை மேம்படுத்துவதில் ராணுவம் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

மேலும், வரும் காலங்களில் இந்திய பாதுகாப்புப் படைகளின் தாக்கும் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி, டேராடூன் இந்திய ராணுவ அகாதெமி உள்பட முன்னணி ராணுவப் பயிற்சி நிறுவனங்களில் ஏற்கெனவே இதுபோன்ற ஆளில்லா விமான தொழில்நுட்ப மையங்கள் தொடங்கப்பட்டு செயல்பாட்டு வந்துள்ளன.

ராணுவத்தில் உள்ள அனைத்து வீரா்களும் ஆளில்லா விமானங்கள் இயக்கும் திறனைப் பெறும் வகையில் பயிற்சித் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

அதுபோல, ஆளில்லா விமான எதிா்ப்பு தொழில்நுட்ப மேம்பாட்டிலும் ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com