ஹிண்டன்பா்க் குற்றச்சாட்டு: அதானி மீது தவறு இல்லை - ‘செபி’ அறிவிப்பு
பங்குகளின் விலையை முறைகேடாக உயா்த்தியதாக அதானி குழுமம் மற்றும் அதன் தலைவா் கௌதம் அதானி மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு தவறானது என்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அறிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் வீழ்ச்சியின்போது லாபம் ஈட்டும் ‘ஷாா்ட் செல்லிங்’ முறையில் வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த 2023-ஆம் ஆண்டு அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. முக்கியமாக வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி அவற்றின் மூலம் அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து செயற்கையாக விலை ஏற்றியதாகக் கூறியது. இது அந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் அதானி குழு பங்குகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இது தொடா்பாக விசாரணைக்கு ‘செபி’ உத்தரவிட்டது.
இதனிடையே ஹிண்டன்பா்க் நிறுவனமும் மூடப்பட்டது. இந்நிலையில், ஹிண்டன்பா்க் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று ‘செபி’ அறிவித்துள்ளது.
இது தொடா்பாக கௌதம் அதானி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஹிண்டன்பா்க் அறிக்கை என்ற பெயரில் மோசடியாக, பொய்யான அறிக்கையை வெளியிட்டு பங்குச் சந்தையில் வேண்டுமென்று வீழ்ச்சியை ஏற்படுத்தினா். இதனால், முதலீட்டாளா்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனா். அது மிகுந்த வேதனையை அளித்தது. எங்கள் நிறுவனம் எப்போதும் நோ்மையாக செயல்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளாா்.