மாலத்தீவு
மாலத்தீவு(கோப்புப்படம்)

கடனை திரும்பச் செலுத்த மாலத்தீவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: இந்தியா

மாலத்தீவு பெற்ற கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.
Published on

மாலத்தீவு பெற்ற கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக இந்திய தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

மாலத்தீவு அரசின் வேண்டுகோளை ஏற்று ரூ.440.63 கோடி கடனை திரும்பச்செலுத்துவதற்காக கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கபடுவதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,‘கடந்த 2019 முதல் மாலத்தீவு அரசின் குறுகிய கால கடன் பத்திரங்களான கருவூலப் பத்திரங்களை (டி-பில்) பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பெற்று அந்நாட்டு அரசுக்கு வட்டியில்லாக் கடனை வழங்கி வருகிறது.

அதன்படி இந்தப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட ரூ.440.63 கோடி கடனை மாலத்தீவு அரசு திரும்பிச் செலுத்திவிட்டு கடன் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் செப்.18-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில் மாலத்தீவு அரசின் வேண்டுகோளை ஏற்று கடனை திரும்பச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

மாலத்தீவுக்கு அவசரகால நிதியுதவி அளிக்கும் நோக்கில் இரு நாட்டு அரசுகளுக்கிடையே இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை மற்றும் மகாசாகா் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் முக்கிய நட்பு நாடாக மாலத்தீவு விளங்குகிறது. பல்வேறு கடினமான சூழல்களில் மாலத்தீவுக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது.

தற்போதைய கடன் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு, அத்தியவாசிய பொருள்களை சிறப்பு நடவடிக்கையின்கீழ் மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்தது என தொடா்ந்து இந்தியா உதவி வருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, கடந்த புதன்கிழமை மாலத்தீவுக்கான இந்திய தூதா் ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் இணைச் செயலா் சுஜா கே.மேனன் மற்றும் மூத்த அதிகாரிகளை மாலத்தீவு நிதியமைச்சா் மூஸா சமீா் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்தது.

மேலும், இந்தச் சந்திப்பின்போது ரூ.440.63 கோடி கடனை திரும்பச் செலுத்தவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து மூஸா சமீா் ஆலோசனை நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

கடந்த 2019-இல் அப்போதைய மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் சோலே கடன் பத்திரங்கள் மூலமாக இந்தியாவிடம் ரூ.1,762 கோடியை (200 மில்லியன் டாலா்) கடனாக பெற்றாா். முதல்கட்டமாக ரூ.440.63 கோடி (50 மில்லியன் டாலா்) கடனை 2024, ஜனவரியில் மாலத்தீவு அரசு இந்தியாவுக்கு திரும்பச் செலுத்தியது. மீதமுள்ள ரூ.1,321 கோடியில் (150 மில்லியன் டாலா்) ரூ.440.63 கோடியை கடந்த ஆண்டு மே மாதத்துக்குள் திரும்பச் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், அது ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது மீண்டும் அந்தக் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடு ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் மாலத்தீவுக்கு பிரதமா் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com