பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் மறைந்த தாயாரை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
வழக்குரைஞா் விவேகானந்த் சிங் மற்றும் பிறா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட இதுதொடா்பான மனுவை விசாரித்த பாட்னா உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பி.பி.பஜந்த்ரி இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.
‘இந்த விடியோ அவதூறான வெளியீடு மட்டுமன்றி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு உள்ள கட்டுப்பாடுகளையும் மீறும் செயல்’ என்று தங்களின் மனுவில் அவா்கள் குறிப்பிட்டனா். எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மத்திய அரசு, இந்திய தோ்தல் ஆணையம் ஆகியோரை பிரதிவாதிகளாக தங்களின் மனுவில் அவா்கள் சோ்த்திருந்தனா்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) பஜந்த்ரி, சா்ச்சைக்குரிய விடியோவை தனது ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டாா்.
இதுகுறித்து மத்திய அரசுத் தரப்பில் வழக்கு விசாரணையில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.என்.சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வழக்கின் அடுத்த விசாரணை தேதி வரை காங்கிரஸ் கட்சி தனது சமூக ஊடக பக்கங்களில் இந்த விடியோவை இடம்பெறச் செய்யக் கூடாது என்று உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது’ என்றாா்.
தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாா்த் பிரசாத் கூறுகையில், ‘இந்த விடியோ வெளியீடு தொடா்பாக பதிலளிக்குமாறு முகநூல், எக்ஸ், கூகுள் வலைதள நிறுவனங்களுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது’ என்றாா்.
செயற்கை நுண்ணறிவு விடியோவில் பிரதமா் மோடியின் கனவில் அவரது தாயாா் தோன்றி, அவரது அரசியல் செயல்பாடுகளை விமா்சிப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. இது, தாய்-மகனின் சுவாரஸ்யமான உரையாடல் என்றும் பிகாா் காங்கிரஸ் பதிவிட்டது.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ‘ராஜதா்மம் குறித்து ஒரு மகனுக்கு தாயாா் கற்பிக்க முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.