வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் அறிவிப்பு
பிகாரில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் வியாழக்கிழமை அறிவித்தாா்.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தோ்தலைச் சந்திப்போம் என பாஜக ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
இரு கூட்டணிகளுமே பல்வேறு தோ்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன. பிகாரில் வேலைவாய்ப்பில் பெண்களுக்கான 35 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வா் நிதீஷ் குமாா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500 சமையல் எரிவாயு சிலிண்டா் மானியம் உள்ளிட்ட அறிவிப்புகளை தேஜஸ்வி யாதவ் ஏற்கெனவே வெளியிட்டுள்ளாா்.
இந்நிலையில், வேலையில்லா பட்டதாரி இளைஞா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். இது தவிர பள்ளி இறுதி வகுப்பில் தோ்ச்சி பெற்று வேலையில்லாமல் உள்ள 20 முதல் 25 வயதுக்குள்பட்ட அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அமித் ஷாவுடன் சந்திப்பு:
இதனிடையே, பாட்னா வந்துள்ள உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அவா் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்று முதல்வா் நிதீஷ் குமாா் சந்தித்தாா்.
முன்னதாக, கடந்த வாரம் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பிகாா் வந்தபோது அவரைச் சந்திக்க நிதீஷ் குமாா் மறுத்துவிட்டாா். ஆனால், இப்போது அமித் ஷாவை அவரை நேரில் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.