ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு...
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on
Updated on
3 min read

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000 க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஆளுங்கட்சியுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் சான்றுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அடுத்து ஹைட்ரஜன் குண்டு வீசப் போவதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார்.

இதனிடையே, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததைப் பற்றி சான்றுகளுடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘தி ஆலந்து பைல்ஸ்’ என்ற தலைப்பில் செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசியதாவது:

”இன்று வெளியிட இருப்பது ஹைட்ரஜன் குண்டு கிடையாது. விரைவில் ஹைட்ரஜன் குண்டு வெளியிடப்படும். நாட்டின் இளைஞர்களுக்கு தேர்தல்களில் எவ்வாறு மோசடி செய்யப்படுகிறது என்பதை காட்டும் மற்றொரு மைல்கல் இது.

இந்திய ஜனநாயகத்தை அழித்த மக்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கும் பணியில் சிலர் ஈடுபடுகின்றனர். எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினர், தலித், பழங்குடியினர், ஓபிசி உள்பட சில சமூகத்தைச் சேர்ந்த மக்களை குறிவைத்து இது நடத்தப்படுகிறது. தற்போது 100 சதவிகித ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

கர்நாடகத்தில் உள்ள ஆலந்து சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 6,018 வாக்காளர்களை நீக்க யாரோ முயற்சித்துள்ளனர். அவர்கள் தற்செயலாக பிடிபட்டுள்ளார். 2023 தேர்தலில் ஆலந்து தொகுதியில் நீக்குவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட மொத்தம் வாக்காளர்கள் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால், 6,018-ஐ விட அதிகம்.

ஆலந்து சட்டப்பேரவைக்கு உட்பட்ட வாக்குச் சாவடி அதிகாரி ஒருவரது உறவினர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் விசாரித்ததில், பக்கத்து வீட்டுக்காரர் நீக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்டபோது, அவர் எந்த வாக்காளரின் பெயரையும் நீக்கச் சொல்லவில்லை எனத் தெரிவித்தார். வாக்காளருக்கோ வாக்காளரை நீக்கச் சொன்னவருக்கோ தெரியாமல், யாரோ ஒருவர் இதனைச் செய்துள்ளார்.

ஆள்மாறாட்டம் செய்வதற்காக தானியங்கிச் செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6,018 விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் வாக்குச் சாவடிகளைக் குறிவைத்து, காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

கோதாபாய் என்ற 63 வயது பெண்ணின் பெயரில் அவருக்கே தெரியாமல் போலி உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் உருவாக்கப்பட்டு, பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிக்கப்பட்டது.

கோதாபாய் உள்நுழைவுகளை பயன்படுத்தி, வெளிமாநிலத்தைச் சேர்ந்த வெவ்வேறு மொபைல் எண்கள் மூலம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சூர்யகாந்த் என்ற வாக்காளரின் உள்நுழைவை பயன்படுத்தி 14 நிமிடங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வாக்காளர்களின் பெயர் நீக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

நாகராஜ் என்பவரின் உள்நுழைவுகளைப் பயன்படுத்தி, 36 நொடிகளில் இரண்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மனிதரால் செய்ய சாத்தியமற்ற ஒன்று.

வாக்காளர் பெயர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் தானியங்கி செயலிகள் மூலம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் உள்ள முதல் வாக்காளரை தேர்ந்தெடுத்து, நீக்குவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது கால் சென்டர் மூலம் செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் பலமாக இருக்கும் வாக்குச் சாவடிகள் குறிவைக்கப்பட்டன. காங்கிரஸ் பலமாக இருந்த 10 வாக்குச் சாவடிகளில் அதிகளவிலான வாக்காளர் பெயர் நீக்க விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த 2018 தேர்தலில் 10 வாக்குச் சாவடிகளில் 8 -ல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது.

மகாராஷ்டிரத்தின் ராஜூரா தொகுதியில் 6,815 வாக்காளர்கள் குறிவைக்கப்பட்டனர். கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, உ.பி. ஆகிய இடங்களில் இதைச் செய்வது ஒரே அமைப்புதான். அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது.” எனத் தெரிவித்தார்.

Summary

Attempt to deletion 6,000 voters in one constituency alone! Rahul alleges with evidence

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com