
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது.
ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 34 பக்தர்கள் பலியாகினர். மற்றும் 20 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து யாத்திரை நிறுத்தப்பட்டது.
கடந்த சில நாள்களாக, தொடர்ந்து அந்தப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பாதை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. நிலச்சரிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையும் பாதிக்கப்பட்டிருந்ததால், கோயிலுக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கனமழை, நிலச்சரிவு காரணமாக தொடர்ந்து 22 நாள்களாக வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் முன்பதிவு செய்து காத்திருந்த மக்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
இதனிடையே வானிலை சற்று மேம்பட்டதன் காரணமாக செப்.17 (புதன் கிழமை) யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. நேற்று காலை 2,500 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதித்த நிலையில், மோசமான வானிலை கருதி யாத்திரை நேற்று மாலை மீண்டும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, இன்று காலை முதல் வானிலை சீரடைந்ததையடுத்து மீண்டும் யாத்திரை தொடங்கியது. தற்போது யாத்திரை சீராக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைஷ்ணவி தேவி கோயில் முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ள நிலையில், கத்ராவில் முன்பதிவு செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.
வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடங்கியது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.