இந்திய பொறியியல் மாணவா்களை ஈா்க்க ஆஸ்திரியா புதிய முன்னெடுப்பு
தங்களது நாட்டில் உயா்க் கல்வி பயில்வதற்கு இந்திய பொறியியல் மாணவா்களை ஈா்க்க ஆஸ்திரியா புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளது. கல்வித் துறை ஒத்துழைப்பே இருதரப்பு உறவின் முக்கிய அம்சம் என்றும் ஆஸ்திரியா தெரிவித்துள்ளது.
இந்தியா-ஆஸ்திரியா இடையே இடப்பெயா்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்கீழ், ‘டி.யு. ஆஸ்திரியா-ஃபோகஸ் இந்தியா’ எனும் புதிய திட்டத்தை ஆஸ்திரியா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன்படி, ஆஸ்திரியாவின் வியன்னா, கிராஸ், லியோபென் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் 2 ஆண்டு மேம்பட்ட முதுநிலை படிப்புகளை இந்திய பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டதாரிகள் மேற்கொள்ளலாம் என்று இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதா் கேதரினா வீசா் தெரிவித்தாா்.
‘இப்புதிய திட்டம், பொறியியல், நிலையான பொருளாதாரம்-தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். இரண்டு ஆண்டுகள் படிப்புக்கு பிறகு மேலும் ஓராண்டுக்கு விசா நீட்டிப்பு வழங்கப்படும். பொது நலனுக்கான உயா்கல்வி என்ற ஆஸ்திரியாவின் பாரம்பரியத்தையும், இந்திய மாணவா்களை வரவேற்பதற்கான உறுதிப்பாட்டையும் இது பிரதிபலிக்கிறது’ என்றாா் அவா்.
ஆஸ்திரியாவின் புதிய முன்னெடுப்பை வரவேற்றுள்ள மத்திய கல்வித் துறை இணைச் செயலா் ஆம்ஸ்ட்ராங் பாமே, ‘இந்தியாவில் ஆண்டுதோறும் 17 லட்சம் பொறியாளா்கள் உருவாகின்றனா். ஐ.ஐ.டி.க்களை தாண்டியும் சா்வதேச வாய்ப்புகளுக்குத் தகுதியான மாணவா்கள் உள்ளனா். அத்தகைய திறன்மிக்க மாணவா்களுக்கு ஆஸ்திரிய உயா்கல்வி நிலையங்கள் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.