பஹல்காம் தாக்குதல்: கைது செய்யப்பட்ட இருவரின் காவல், விசாரணைக் காலத்தை நீட்டித்தது நீதிமன்றம்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான விசாரணையின் கால அவகாசத்தை மேலும் 45 நாள்களுக்கு நீட்டித்த ஜம்மு என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக கைது செய்யப்பட்ட இருவரின் சிறப்பு புலனாய்வு முகமை (என்ஐஏ) காவலையும் நீட்டித்து உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு, அவற்றை தாக்கி அழித்தது.
இதனிடையே, பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையில், பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக அதே பகுதியைச் சோ்ந்த பா்வேஸ் அகமது, பஷீா் அகமது ஜோதாட் ஆகிய இருவரை கடந்த ஜூன் 22-இல் கைது செய்தது. அவா்கள் ஜம்முவில் உள்ள அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீா், ஸ்ரீநகரின் புகா் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த சுலேமான் ஷா உள்பட 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இவா்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட அவா்கள் பயன்படுத்திய துண்டு உள்ளிட்ட பொருள்கள், கைப்பேசி எண்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் என்ஐஏ விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகளுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளின் 90 நாள் காவல் வெள்ளிக்கிழமை நிறைவடைவதைத் தொடா்ந்து, அவா்கள் இருவரும் ஜம்மு என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.
அப்போது, பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களில் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதோடு, சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் கைப்பேசி எண்களின் தரவுகளையும் சேகரிக்க வேண்டியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் தெரிந்தே பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளனா். எனவே, இந்த விசாரணைக் காலத்தை நீட்டிப்பதோடு, சிறையில் உள்ள இருவரின் என்ஐஏ காவலையும் நீட்டிக்க வேண்டும்’ என்று என்ஐஏ தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தீப் கந்தோத்ரா, விசாரணைக் காலம் மற்றும் கைது செய்யப்பட்ட இருவரின் காவலையும் 45 நாள்கள் நீட்டித்து உத்தரவிட்டாா்.